2011-01-26 14:59:16

ஜனவரி 27. – வாழ்ந்தவர் வழியில்........,


இரண்டாம் உலகப் போர் காலத்தில் இலட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் 1945ம் ஆண்டு சனவரி 27ல் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.

அவுஷ்விட்ஸ் என்பது 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாத்சி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் நகரருகில் அமைந்திருந்தது.

இம்முகாமில் ஏறத்தாழ 11 இலட்சம் முதல் 15 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் யூதர்கள் ஆவர். யூதர்களுடன் கொல்லப்பட்டவர்களில் கம்யூனிஸ்டுகள், ரஷ்யப் போர்க் கைதிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சிலாவ் இனத்தவர்கள், நாடோடிகள், அரசியல் அதிருப்தியாளர்கள் ஆகியோரும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தார்கள்.

உழைக்கக்கூடியவர்கள், உழைக்க முடியாதவர்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படக்கூடியவர்கள் என்று பல தேர்வு நடக்கும். ஏனையோர் சைக்ளோன்-பி என்ற பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்த நச்சு வாயு பரவிய அறைகளில் அடைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்காள்.

நவம்பர் 1944 இல் சோவியத் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தபோது அவர்களிடமிருந்து தங்கள் குற்றங்களை மறைக்க நாத்சி படையினர் பிர்க்கெனாவு நச்சுவாயு அறைகளைக் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். ஜனவரி 27, 1945 இல் ஏறத்தாழ 7,500 கைதிகளைச் சோவியத் செம்படையினர் மீட்டார்கள்.








All the contents on this site are copyrighted ©.