2011-01-25 15:40:42

சனவரி 26வாழந்தவர் வழியில்...


1950ம் ஆண்டு சனவரி 26ம் நாள் இந்தியாவில் மக்களாட்சி பிறந்தது. மக்களைக் கொண்டு, மக்களால், மக்களுக்கென நடத்தப்படும் அரசே குடியரசு அல்லது மக்களாட்சி என்று சொல்லப்படுகிறது. குடியரசு நாளன்று புதுடில்லியிலும், இன்னும் பிற மாநிலங்களின் தலைநகரங்களிலும் கொடியேற்றம், பேரணிகள் என்று இவ்விழா கொண்டாடப்படும்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் இந்த விழாவைக் கொண்டாட மக்களைச் சுற்றி இராணுவத்தினரும் காவல்துறையினரும் பாதுகாப்பு தரவேண்டியுள்ளது. இவ்விழா நடத்தப்படும் இடங்களில் மக்களின் எண்ணிக்கையை விட இராணுவத்தினர், காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்விழாவன்று நடத்தப்படும் பேரணிகளில் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் மக்களின் கலாச்சாரம், இந்தியாவின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஆகியன வழக்கமாக அரங்கேறும். அண்மைய ஆண்டுகளில், இராணுவத் தளவாடங்கள் இப்பேரணியில் அதிகமாய் முக்கியத்துவம் பெறுவது வேதனையைத் தருகிறது. இந்தியாவின் மக்களாட்சி எவ்வழி செல்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்தக் கேள்விக்கு 2001ம் ஆண்டு சனவரி 26 குடியரசு நாளன்றே நமக்குப் பதில் வந்தது. ஒரு எச்சரிக்கையாக வந்தது. நாம் 21ம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்த அன்று குஜராத்தில் புஜ் (Bhuj) என்ற இடத்தில் காலை ஒன்பது மணியளவில், குடியரசு விழா கொண்டாடப்பட்ட அதே வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏறத்தாழ 20,000 பேரைக் கொன்றது. அதற்கடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஜராத்தில் வெடித்த கலவரம் நிலநடுக்கத்தை விட இன்னும் அதிக அதிர்ச்சியைத் தந்தது. தங்களையே அடக்கி ஆளத்தெரியாத மக்கள் இருக்கும் வரை, மக்களாட்சி இராணுவத்தின் சக்தியை அதிகமாய் நம்பி இருக்க வேண்டும். இந்தியாவின் மக்களாட்சி எவ்வழி செல்கிறது என்ற கேள்விக்கு இதுதான் பதில்.







All the contents on this site are copyrighted ©.