2011-01-25 15:04:50

1. திருத்தந்தை : திருச்சபை சமூக அநீதிகளைப் புறக்கணிக்க முடியாது


சன.25,2011. மனித முன்னேற்றம், சமூக நீதி, ஒவ்வொரு விதமான அடக்குமுறையிலிருந்து மக்களை விடுவித்தல் ஆகிய கூறுகள் திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் மறக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது, என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

அதேசமயம், திருச்சபை அரசியல்துறையின் அதிகாரத்தையும் மதிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, வறுமை, நோய்கள், கல்வியறிவின்மை, சிறார் மத்தியிலான ஊட்டச்சத்துக் குறைவு போன்ற மனித சமுதாயத்தின் இக்காலத்திய பிரச்சனைகளைத் திருச்சபை தனது மறைப்பணியில் மறந்தால், தேவையில் இருக்கும் மற்றும் துன்பப்படும் அயலானுக்கு அன்பு என்ற நற்செய்திப் போதனையை மறந்ததாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

வருகிற அக்டோபர் 23ம் தேதி கடைபிடிக்கப்படும் உலக மறைபரப்பு ஞாயிறுக்கென இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட தனது செய்தி்யில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் இன்னும் மக்கள் கிறிஸ்துவை அறியாமலும் மீட்பின் செய்தியை இன்னும் கேட்காமலும் இருக்கிறார்கள் என்று நினைத்து அமைதியாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நற்செய்தியை ஏற்கனவே பெற்றிருப்பவர்கள்கூட அதனை மறந்தும் கைவிட்டும் திருச்சபையில் தாங்கள் உறுப்பினர்கள் இல்லை என்றும் சொல்கின்றனர், பாரம்பரியமாகக் கிறிஸ்தவச் சமூகங்களில் வாழ்பவர்களும் பல சூழல்களில் விசுவாசத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

எனவே நற்செய்தி அறிவிப்பது திருமுழுக்குப் பெற்ற அனைவரின் கடமை என்பதைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, உலகில் திருச்சபையின் நற்செய்திப் பணிக்கு ஒத்துழைப்பும் அக்கறையும் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.