2011-01-24 15:15:20

திருத்தந்தை : மனமாற்றத்திற்கான அர்ப்பணமே கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான வழி.


சன 24, 2011. கிறிஸ்தவ ஐக்கியத்தை உண்மையாக்கும் பொருட்டு, அனைத்துக் கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவை நோக்கிய தங்கள் மனமாற்றத்திற்கான அர்ப்பணத்தை தீவிரப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு இஞ்ஞாயிறு வழங்கிய நண்பகல் மூவேளை ஜெப உரையில், கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான ஜெப வாரம் பற்றி குறிப்பிட்ட பாப்பிறை, மனிதர்களிடையேயான ஐக்கியத்திற்கும், இறைவனுடன் ஆன உள்ளார்ந்த ஒன்றிப்பிற்குமான அடையாளமாகவும், கருவியாகவும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் விளங்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

திருச்சபையின் வாழ்க்கைப் பாரம்பரியங்களில் காணப்படும் அப்போஸ்தலர்களின் விசுவாசத்தில் வேரூன்றப்பட்ட வாழ்க்கை, சகோதரத்துவ ஐக்கியம், திருநற்கருணை, செபம் என்ற நான்கு முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாக நம் வாழ்வு இருக்க வேண்டும் என மூவேளை செப உரையின் போது மேலும் கூறினார் பாப்பிறை.

கிறிஸ்தவர்களிடையே பிரிவினைகளும், தோல்விகளும், குறைபாடுகளும் இருக்கின்றபோதிலும் கிறிஸ்துவுடன் நெருக்கமாக ஒன்றித்திருப்பதன் வழியாக மட்டுமே திருச்சபையானது தன் பணிகளில் வெற்றி காணமுடியும் என மேலும் கூறினார் அவர்.

கிறிஸ்துவின் திருச்சபையில் காணப்படும் ஒவ்வொரு பிளவும் கிறிஸ்துவுக்கு எதிரான குற்றம் என்ற பாப்பிறை, இறைவனின் அருள் எனும் வல்லமையின் உதவியோடு நாம் ஐக்கியத்தை நமக்குள் கொணர முடியும் என்றார்.இறைவனை நோக்கிய மனந்திரும்பலுக்கானத் தீவிர அர்ப்பணம், கண்ணால் காண வல்ல முழு ஐக்கியத்தை நோக்கித் திருச்சபையை இட்டுச்செல்லும் என்ற உறுதிப்பாட்டையும் வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.