2011-01-24 15:15:37

இணையதளம் வழியாக நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கருக்குத் திருத்தந்தை அறிவுரை


சன.24,2011. நவீன இணையதள வசதிகளைப் பயன்படுத்தி நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கர் பிறரை மதிப்பவர்களாகவும், ஆன்லைனில் புகழ்பெற வேண்டுமென்பதைத் தங்களது இறுதி இலக்காகக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வருகிற ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படும் 45 வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கென இத்திங்களன்று நிருபர் கூட்டத்தில் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Blog, Facebook, YouTube போன்றவை வழியாக நற்செய்தி அறிவிக்கும் கத்தோலிக்கர், பொறுப்பு, நேர்மை, முன்னெச்சரிக்கை, காலமறிந்து செயல்படல் ஆகிய கிறிஸ்தவப் பண்புகளைக் கையாள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் டிஜிட்டல் உலகத்தின் நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துக் கூறியுள்ள திருத்தந்தை, சமூகப் பன்வலை அமைப்புகள் உறவுகளையும் சமூகங்களையும் கட்டி எழுப்புவதற்கு நேர்த்தியான வழிகள், எனினும், உண்மையான நட்புகளின் இடத்தில் மாயத்தோற்றமான உறவுகள் வைக்கப்படுவதும், உண்மையான விவரங்களைவிட செயற்கையான பொது விவகாரங்களை உருவாக்குவதற்கு சோதிக்கப்படுவதும் குறித்து எச்சரித்துள்ளார்.

புதிய தொடர்புச் சாதனங்கள் வழியாக நற்செய்தியை அறிவிப்பது என்பது, பல்வேறு ஊடகங்களில் மதம் சார்ந்தவைகளை வெளியிடுவது மட்டுமல்ல, ஒருவர் தனது சொந்த இணையப் பக்கத்தில் தனது கிறிஸ்தவப் பண்புகளுக்குச் சாட்சியாகவும் நற்செய்தியோடு முழுவதும் அவை ஒத்திணங்கிச் செல்வதாகவும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நடைமுறையில் மெய்மை எனக் கொள்ளத்தக்க தொடர்பு, நம் வாழ்க்கையின் அனைத்துக் கட்டங்களிலும் இடம் பெறும் நேரடியான மனிதத் தொடர்பாக இருக்க முடியாது மற்றும் அதன் இடத்தை அது எடுக்கவும் முடியாது என்றும் அவர் கூறினார்

"டிஜிட்டல் உலகில் உண்மை, அறிவிப்பு, வாழ்க்கையின் எதார்த்தம்", என்ற தலைப்பில் இந்த 45 வது உலக சமூகத் தொடர்பு நாள், வருகிற ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எழுத்தாளர்க்குப் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதி, உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் திருத்தந்தையின் இச்செய்தி ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.