2011-01-22 15:59:45

காஷ்மீர் மனித உரிமை நிலவரம்: ஐ.நா. கவலை


சன.22,2011. இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா (Margaret Sekaggya) வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே பல முறை ஐ.நா. மனித உரிமைப் பிரிவினர் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தற்போது அவர்களது பயணத்துக்கு அனுமதியளித்திருந்தது.

அதையடுத்து, காஷ்மீர், ஒரிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், குஜராத் மற்றும் டெல்லியில் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா பத்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தனது பயணத்தின் முடிவில், இவ்வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்கரெட் செகாக்யா, பாதுகாப்புச் சட்டங்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவது குறித்துக் கவலை வெளியிட்டார்.

குறிப்பாக, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்களும்குகூட குறிவைக்கப்படுவதாக மார்கரெட் செகாக்யா கவலை தெரிவித்தார்.

அவரது பயணம் தொடர்பான விரிவான அறிக்கை, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது







All the contents on this site are copyrighted ©.