2011-01-21 15:49:12

திருப்பீட பல்சமய உரையாடல் அவை பேச்சுவார்த்தைக்குத் திறந்த மனதுடனே இருக்கின்றது - திருப்பீடப் பேச்சாளர்


சன.21,2011: எகிப்தில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம் பெறும் வன்முறைகள் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எகிப்தின் முக்கிய முஸ்லீம் அறிஞர்கள் வத்திக்கானுடனான அனைத்து உரையாடல்களையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

கெய்ரோவிலுள்ள அல்-அசார் al-Azhar பல்கலைக்கழகத் தலைவர் Sheik Ahmad el-Tayeb மற்றும் அதன் இசுலாமிய ஆய்வுக் கழக உறுப்பினர்கள் எடுத்த இந்தத் தீர்மானம் குறித்துப் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, எந்த நிலையிலும் திருப்பீட பல்சமய உரையாடல் அவை பேச்சுவார்த்தைக்குத் திறந்த மனதுடனே இருக்கின்றது என்று கூறினார்.

எகிப்தின் முக்கிய முஸ்லீம் அறிஞர்கள் வெளியிட்ட இந்தத் தீர்மானத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதற்குத் தேவையான தகவல்களைத் திருப்பீட பல்சமய உரையாடல் அவை சேகரித்து வருகிறது என்றும் அருட்தந்தை லொம்பார்தி கூறினார்.

திருப்பீட பல்சமய உரையாடல் அவைக்கும் அல்-அசார் குழுவுக்கும் இடையே ஆண்டு தோறும் பிப்ரவரி இறுதியில் உரையாடல் நடைபெறுவது வழக்கம். இவ்விரண்டு தரப்பும் சேர்ந்த குழு 1998ல் உருவாக்கப்பட்டது.

இவ்வாண்டு சனவரி ஒன்றாந்தேதி எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம் பெற்ற குண்டுவெடிப்பு வன்முறையில் 23 பேர் இறந்தனர். இந்த வன்முறையைத் திருத்தந்தை கண்டித்துப் பேசியதற்காக முஸ்லீம் அறிஞர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.