2011-01-21 13:34:46

சனவரி 22. வாழ்ந்தவர் வழியில்...........


கிரஹம் ஸ்டெய்ன்ஸ் 1941ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு கிறிஸ்தவ மறைபோதகர். இவரைக் கிறிஸ்தவ மறைபோதகர் என்று சொல்வதை விட சமூகத்தொண்டர் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இவர் சிறுவனாக இருந்தபோது இந்தியாவின் பரிபாடா நகரைச் சேர்ந்த சந்தானு சத்பதி என்ற சிறுவனின் பேனா நண்பனானார். இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள், ஒத்த வயதுடையவர்கள். கடிதங்கள் மூலம் தொடர்ந்த இந்த நட்பின் தொடர்ச்சியாக தன் நண்பன் சத்பதியைப் பார்க்க 1965ம் ஆண்டில் இந்தியா வந்தார் கிரஹம் ஸ்டெய்ன்ஸ். இவர் இந்தியா வந்தது நற்செய்தி அறிவிக்க அல்ல. மாறாக தன் நண்பனைப் பார்க்க. ஆனால் அங்குள்ள பழங்குடி மக்களின் நிலைகளைப் பார்த்த ஸ்டெய்ன்ஸ் இந்தியாவிலேயே தங்கிப் பணியாற்ற ஆர்வம் கொண்டார். இவரின் பணி அதிகமும் தொழுநோயாளிகளிடையேயானதாக இருந்தது. தான் பணியாற்றிய ஒவ்வொரு தொழுநோயாளியிடமும், சீரான வாழ்விற்கு உதவும் கிறிஸ்தவ மதிப்பீடுகளையும் எடுத்துரைத்தார். கயிற்றால் பாய் பின்னுவது, கோரம்புல் கொண்டு கூடை செய்வது எனப் பல தொழில்களையும் பழங்குடியினருக்குக் கற்றுக்கொடுத்தார். மனோகர்பூர் கிராமத்தின் காட்டுப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கென ஒவ்வோர் ஆண்டும் கூட்டம் ஒன்றையும் நடத்தி வந்தார். இதே போன்று ஒரிசாவின் ஏழை மக்களிடையே பணியாற்றிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளாடிஸ் என்பவரை 1981ல் சந்தித்து 1983ல் திருமணமும் புரிந்தார். இவருக்கு எஸ்தர் என்ற மகளும் பிலிப், திமோத்தி என்ற மகன்களும் பிறந்தனர். குடும்பமே ஒன்றிணைந்து நற்செய்தி அறிவிப்புப் பணியிலும் சமூகப்பணிகளிலும் ஆர்வம் காட்டி உழைத்தது. மனோகர்பூரில் 4 நாள் கிறிஸ்தவக்கூட்டம் ஒன்றை நடத்திவிட்டு தன் மகன்களுடன் வாகனத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்து தீவிரவாதக் கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளானார். 35 வயதான ரபீந்திர குமார் பால் எனும் தாரா சிங் தலைமையிலான குழு 1999ம் ஆண்டு சனவரி மாதம் 22ம் தேதி நள்ளிரவு இவர்கள் தூங்கிக்கொண்டிருந்த வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 58 வயதான ஸ்டெய்ன்ஸ், அவர் மகன்கள் 10வயது பிலிப், 7 வயது திமோத்தி ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். இத்தனை பெரிய துயரையும் தாங்கிக் கொண்டு, கணவனையும் இரு குழந்தைகளையும் கொன்றவர்களை தான் மன்னிப்பதாக அறிவித்தார் கிளாடிஸ். 'மன்னிப்பில் கசப்புணர்வுகள் இல்லை. கசப்புணர்வுகள் இல்லையெனில் அங்கு நம்பிக்கை இருக்கும்' என்று கூறி மன்னிப்பின் மகத்துவத்தை செயலில் காட்டியவர் கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ். மன்னிப்பதாக இவர் வெளிப்படையாக அறிவித்திருந்த போதிலும், சட்டம் தன் பாதையில் சென்று ஒரிசா உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தாரா சிங்கின் ஆயுள் தண்டனை தீர்ப்பை இந்த வெள்ளியன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிச் செய்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.