2011-01-18 14:38:22

திருமணங்களை நன்முறையில் கட்டியெழுப்பும் சமூகங்களாக மறைமாவட்டங்கள் செயல்படட்டும்


சனவரி 18,2011. திருமணங்களை நன்முறையில் கட்டியெழுப்பும் சமூகங்களாக மறைமாவட்டங்கள் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் கெவின் ரோட்ஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் பொதுநிலையினர், திருமணம், குடும்ப வாழ்வு மற்றும் இளையோருக்கான அவையின் தலைவர் ஆயர் ரோட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக திருமண நாள் குறித்தும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிறப்பிக்கப்படும் திருமண வாரம் குறித்தும் அதில் தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக திருமண நாளுக்குத் தலைப்பாக, 'ஒருவரை ஒருவர் அன்பு கூர்வோம்' என்பது எடுக்கப்பட்டிருக்க, பிப்ரவரி 7 முதல் 14 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிறப்பிக்கப்படும் திருமண வாரத்திற்கு 'திருமணத்தைப் பலப்படுத்துவோம்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்தைப் பலப்படுத்தவேண்டியதன் தேவை குறித்த தேசிய அளவிலான அக்கறை, திருமண கல்விக்கானப் புதிய முயற்சிகள், திருமண நெருக்கடிகளின்போதான தலையீடுகள், திருமணப் பலன்கள் குறித்த செய்திகளை ஊக்குவித்தல் போன்றவைகளை நோக்கம் கொண்டதாகத் திருமண வாரக் கொண்டாட்டங்கள் இருக்கும் என்றார் ஆயர் ரோட்ஸ்.








All the contents on this site are copyrighted ©.