2011-01-18 14:39:04

சனவரி 19 – வாழந்தவர் வழியில்...


சனவரி 19 – வாழந்தவர் வழியில்...

இலண்டன் பெருநகரில் ஆங்கிலிக்கன் சபையின் புனித பவுல் பேராலயத்தில் அறிவியல் மேதையான ஒருவரின் உருவம் வைக்கப்பட்டுள்ளது. அவ்வுருவத்தின் கீழ் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் இவை:

இவர் தன் நாட்டின் வளங்களை விரிவுபடுத்தினார்.

மனித சக்தியை வளர்த்தார்.

அறிவியலை சமுதாய மேம்பாட்டிற்கென பயன்படுத்தினார்.

இப்புகழ் மாலைக்குரியவர் ஜேம்ஸ் வாட் (James Watt) எனப்படும் அறிவியல் மேதை. நீராவியின் சக்தியால் இயக்கப்படும் இயந்திரங்கள் வழியாக இங்கிலாந்தில் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர் ஜேம்ஸ் வாட். குதிரைகளைக் கொண்டு செய்யப்பட்டத் தொழில்கள் எல்லாம் நீராவி இயந்திரங்களால் செய்யப்பட்டன. உற்பத்தி பெருகியது; போக்குவரத்து அதிகரித்தது; தொழில் புரட்சி பரவியது.

நீராவி இயந்திரங்களின் சக்தியைக் கணக்கிட, அவ்வியந்திரங்கள் ஒவ்வொன்றும் எத்தனை குதிரைகள் செய்யக்கூடிய தொழிலைச் செய்கின்றன என்ற அளவில் ‘குதிரை சக்தி’ என்ற எண்ணத்தை அறிமுகம் செய்தவர் ஜேம்ஸ் வாட். இன்றும் இயந்திரங்கள் குதிரை சக்தி Horsepower (HP) என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. சக்திக்கு ஓர் அளவை இவர் உருவாக்கியதால், சக்தியின் அடிப்படை அளவுக்கு Watt என்ற இவரது பெயர் தரப்பட்டுள்ளது.

ஒளி, வெப்பம், காற்று என்று இயற்கையில் உலவி வரும் பல்வேறு சக்திகளுக்கு கடிவாளம் மாட்டி, அவற்றை இயந்திர சக்தியாய் மாற்றியதால் மனித சமுதாயம் முன்னேறியுள்ளது. அந்த முன்னேற்றத்திற்குத் தன் பங்கை அளித்தவரும், சக்திக்குப் புதியதோர் இலக்கணம் சொன்னதன் மூலம் மனிதரின் அறிவுச் சக்தியை ஒரு படி மேலே கொண்டு சென்றவருமான ஜேம்ஸ் வாட் (James Watt) 1736ம் ஆண்டு சனவரி 19ம் நாள் பிறந்தார்.








All the contents on this site are copyrighted ©.