2011-01-17 15:06:58

சனவரி 18 - வாழ்ந்தவர் வழியில்


“தெய்வத்தைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவனிடம் தாவரங்கள் பேசும்” . தனது 79வது வயதில் மரணத்தைத் தழுவிய அந்த நேரத்தில் இவ்வாறு கூறியவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (George Washington Carver : Jan.1864-5 Jan.1943). அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானியும் தாவிரவியல் நிபுணரும் கல்வியாளரும் கண்டுபிடிப்பாளருமான இவர், கருப்பு இனத்தைச் சேர்ந்த ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்தில் கருப்பர்கள் பிறந்த தேதி குறிக்கப்படுவதில்லை என்பதால் இவர் பிறந்த தேதி சரியாகத் தெரியவில்லை. எனினும் 1864ம் ஆண்டு சனவரியில் மிசௌரி மாநிலத்தில் அடிமைத்தனம் ஒழிக்கப்படுவதற்கு முன்னர் இவர் பிறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தாவரங்கள் மீது மிகுந்த பற்று கொண்ட ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் இறந்த போது இவரது கையில் ஒரு பூ இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அலபாமா மாநிலத்தில் பருத்தி வேளாண்மையில் விவசாயிகள் மிகுந்த கஷ்டப்பட்டனர். எனவே காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் சேர்க்கும் ஆற்றல் பருத்திக்கு இல்லை என்று கூறி வேர்க்கடலையை மாற்றுப் பயிரிடுமாறு வலியுறுத்தியவர் இவர். இந்தத் தனது கருத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காக ”GOD’S LITTLE WORKSHOP” என்ற ஆய்வுக்கூடத்தை நிறுவி, அந்தக் கூடத்திற்குள் விவிலியத்தைத் தவிர வேறு எந்தப் புத்தகத்தையும் கொண்டு வரவோ, படிக்கவோ அனுமதிக்காமல் இருந்தவர். இவ்வாறு உலகில் வேர்க்கடலைச் சாகுபடிக்கு வித்திட்டவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்.

1941ம் ஆண்டில் Time இதழ், இவரை “கருப்பு லெயோனார்தோ” என்று பெயரிட்டு பெருமைப்படுத்தியது. கருப்பு இனத்தவர் அறிவற்றவர்கள் என்ற இழிவையும் போக்கியவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்.







All the contents on this site are copyrighted ©.