2011-01-17 15:08:30

இயற்கையோடு இணைந்த வாழ்வு


சன.17,2011: பாசி படிந்த சுவர்களில் பாளம் பாளமான வெடிப்புகள்; வெடிப்புகளில் பூக்கும் தாவரங்கள்; பூக்களைப் பற்றி இழுத்தேன், அவை வேரோடு வெளி வந்தன. பூக்கள் எல்லாம் என் கரங்களில், பூவே நீ யார்? பூக்கும் செடிகளே நீங்கள் யார்? வேரே நீ யார்? வேருடன் ஒட்டிய மண்ணே நீ யார்? தெய்வம் யார்? மனிதன் யார்? மனிதன் - தெய்வ உறவு புரிந்துவிட்டால், பூவே, உன்னையும் என்னால் புரிந்துகொள்ள முடியும்.

டென்னிசனின் இந்தக் கவிதை வரிகள் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழவும் இயற்கையில் இறைவனைக் கண்டு களிக்கவும் ஒவ்வொரு மனிதனையும் சுண்டி இழுக்கின்றன. ஆனால் இந்த நாட்களில் உலகில் ஆங்காங்கே இடம் பெறும் கடும் பனிப்பொழிவு, பெருவெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், ஆழிப்பேரலை போன்றவற்றை ஊடகங்களில் வாசிக்கும் போதும், பார்க்கும் போதும் இயற்கைத் தாய் ஏன் இப்படி மனிதரை வாட்டுகின்றாள் என்று சிந்திக்க வைக்கின்றது. படைப்பி்ன் சிகரமான இந்த மனிதன் இயற்கைத் தாயை படுத்தும் பலவிதமானச் சித்ரவதைகள்தான் இவற்றுக்குக் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழகத்தில் கிரனைட் தொழில் என்ற பெயரில் மலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. நீர்நிலைகள் ஆக்ரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. நிலத்தடி நீர்வளம் குறைந்து கொண்டே போகிறது. இதனால் நீதிமன்றங்கள் உமுறுகின்றன. செயல்பட வேண்டிய சக்திகளோ உறங்குகின்றன. இந்நிலை தமிழகத்தில் மட்டும்தானா, இல்லையே!.

கடந்த வாரத்தில் வந்த ஒருசில செய்திகளை மட்டும் பார்ப்போமே. சீனாவின் 258 நகரங்களில் அமில மழை. ஆண்டுக்கு 300 கோடி டன் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரித்து தன்னுடைய ஆலைகளுக்கு இடைவிடாமல் அளித்துக் கொண்டிருக்கும் சீனாவுக்குப் பரிசாகக் கிடைப்பது அமில மழைதான். இந்த அமில மழையால் மக்களுக்கு தோல் வியாதி, சுவாசக் கோளாறு, இதயம், நுரையீரல்களில் பாதிப்பு, ஒவ்வாமை போன்றவை ஏற்படுகின்றன. அத்துடன் மக்களுடைய சாப்பாடு, தூக்கம், ஓய்வு, மன அமைதி ஆகியவையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்படைந்து வருகின்றன. சீனச் சுற்றுச்சூழல் கண்காணிப்புப் பிரிவு தலைமைப் பொறியாளர் ஷுவாங் மஷான், “சீனா டெய்லி” என்ற அரசு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்திருக்கிறார். நிலக்கரியை எரிப்பதால் வெளியாகும் ஆக்ஸைடுகள், கந்தக வாயுவாகவும் நைட்ரிக் வாயுவாகவும் பிரிந்து நீர்த்துளிகளுடன் சேர்ந்து பிறகு அமில மழையாகப் பெய்கிறது. அமில மழை என்பது ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும்தான் அதிகம். அதற்கு அடுத்த இடத்தைச் சீனாதான் பிடித்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

பிரேசிலில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் தற்சமயம் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் 500க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்தக் கனமழையினால் பல நகரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஆஸ்திரேலியாவைத் தாக்கிய புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல இந்தியர்கள் தங்கள் வீடுகளையும் வியாபாரத்தையும் இழந்துள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளில் பெய்த கன மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பத்து இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கடும் வெள்ளத்தில் நான்கு இலட்சம் ஏக்கர் பரப்பிலான வேளாண் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் உடைமைகள் அனைத்தையும் இழந்து, பின்னர் தங்கள் வாழக்கையை ஓரளவு மீளமைத்துக்கொண்ட பல குடும்பங்கள், தற்போது மறுபடியும் தமது உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சபரிமலைக்கு அருகில் நடந்த விபத்தில் 104 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர், ஐம்பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அண்மையில் -20 டிகிரி குளிராக இருந்த காஷ்மீரில் மீண்டும் பனிப்பொழிவு.

ஆஸ்திரேலியாவிலும் இலங்கையிலும் ஏற்பட்ட கடும் வெள்ளத்தைக் கடந்த பல ஆண்டுகளில் அப்பகுதிகளில் தற்சமயம் மிகவும் மோசமாக இடம் பெற்ற “ல நீனா” (La Nina) வெப்பநிலை நிகழ்வுகள் என்று வானியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். பசிபிக் பெருங்கடலின் சராசரி குளிர் வெப்பநிலையைவிட மேலும் குளிரான வெப்பநிலையை “ல நீனா” என்று ஆய்வாளர்கள் பெயரிடுகின்றனர். கானடாவின் கிழக்கு ஆர்டிக்ப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெப்பமான காலநிலைக்கும், இந்தக் குளிர் காலத்தில் அட்லாண்டிக்கில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவுக்கும் இந்த “ல நீனா” வெப்பநிலையே காரணம் என்றும் சொல்கின்றனர். தென் அமெரிக்காவின் அட்லாண்டிக் பகுதியில் அமைந்துள்ள பிரேசிலில் ஏற்பட்ட கடும் வெள்ளமும் இந்த “ல நீனா”வுடன் தொடர்புடையது என்று CBC செய்தி நிறுவனத்தின் வானியல் ஆய்வாளர் Natasha Ramsahai சொல்கிறார். இந்த “ல நீனா” வெப்பநிலை இந்த 2011ம் ஆண்டு கோடையில் உலகின் வடபகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த வெப்பநிலை மாற்றங்களுக்கும், மனித சமூகங்களின் உயர்வுகள் மற்றும் வீழ்ச்சிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த வெப்பநிலை மாற்றங்கள் மக்களின் கலாச்சாரங்களையே பாதித்திருக்கின்றன. ஒரு சமுதாயத்தின் வளமையான காலம், வெப்பமான மற்றும் மழை பெய்தக் கோடை காலங்களோடு தொடர்பு கொண்டுள்ளன. அதேசமயம் கடும் வெப்பநிலை மாற்றங்களின் போது ஒரு சமூகத்தின் அரசியலில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அக்காலத்திய உரோம் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிக் கடந்த வாரத்தில் வெளியான ஓர் ஊடகச் செய்தி இதனை உறுதிப்படுத்துகின்றது. 2,500 வருட பழமைவாய்ந்த 9,000 மரவேலைப்பாடுகளை வைத்து ஆய்வு செய்த நிபுணர்கள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

மத்திய அமெரிக்காவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் மாயா இனக் கலாச்சாரம் (Maya) அழிந்ததற்கு வெப்பநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எட்டாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் மாயா இன மக்கள் இருந்தனர். ஆனால் 200 ஆண்டுகளுக்குள் அம்மக்களின் நகரங்கள் கைவிடப்பட்டன. இந்த மக்கள் கால்வாய் அமைப்புக்களையும், கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர்த் தேவைக்கென மழைநீரைச் சேகரித்து வைப்பதற்கு நீர்த்தேக்கங்களையும் கட்டியிருந்தனர். அப்படியிருந்தும்கூட மூன்று முறை ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் நீண்டகால வெப்பத்தினால் அந்த இனமே முழுவதும் அழிக்கப்பட்டு விட்டதாக நம்பப்படுகிறது.

அன்பர்களே, இயற்கை அன்னை மனிதனின் சுயநல ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படும் போது அவளின் உடலில் ஏற்படும் இரத்தக் கீறல்கள், நாடு இனம் நிறம் மொழி செல்வந்தர் ஏழை என்ற வேறுபாடில்லாமல் எல்லாரையும் தாக்குகின்றது. ஐயா, பூமிப்பந்து சூடாகிக் கொண்டே வருகிறது. சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது முயற்சி செய்யுங்கள், அதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்று கடந்தபல ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இயற்கைப் பிரியர்களும் குரலை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள், நாமும் அவர்களோடு சேர்ந்து நமது குரலையும் ஒலிக்கச் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் ஒரு சிறு முயற்சியாவது செய்ய வேண்டாமா?. மரம் நடுதல், இருக்கும் மரங்களைப் பாதுகாத்தல், வீடுகளில் மழைநீரைச் சேமித்தல், சுற்றுச்சூழலை அசிங்கப்படுத்துவதை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் இறங்கலாமே. இயற்கையில் தன்னை வெளிப்படுத்தும் இறைவனைக் கண்டு அந்த இயற்கையைப் பாதுகாக்க முயற்சிக்கலாமே. வீட்டிலும் நாட்டிலும் பசுமைக்கு வணக்கம் சொல்லி வாழ வைக்கலாமே. தமிழகத்தில் உள்ள 104 அணைகள் 150 கோடி ரூபாயில் உலக வங்கி நிதி உதவியுடன் புனரமைக்கப்படும் என்பன போன்ற கடந்த வாரச் செய்திகள் ஆறுதலானவை.

சின்கான் என்பவர், மஹாயான புத்தமதத்தின் ஜப்பானிய பள்ளியில் Tendai புத்தமதக் கல்வியை ஆறு வருடங்கள் படித்து, பின் சீனா சென்று ஜென்னைப் பல வருடங்கள் படித்துத் திரும்பியிருந்தார். அவரிடம் ஒவ்வொருவரும் தேவையற்ற கேள்விகளைக் கேட்கத் தயாராக இருந்தனர். ஒருவர் சின்கானிடம் சென்று, நான் சிறுவனாக இருந்த போதே “டென்டை”ப் படித்தேன். அது, “புற்களும் மரங்களும் ஞானமடையக்கூடும்” என்று சொல்கிறது. எனக்கு அது புரியவில்லையே என்றார். அதற்கு சின்கான், “புற்களும் மரங்களும் ஞானமடையக்கூடும்” என்று நாம் வாதிப்பதால் என்ன பயன்? இப்பொழுது நீ எப்படி ஞானம் அடைய முடியும்? என்பதுதான் கேள்வி. அது குறித்து நீ சிந்தித்தாயா? என்று கேட்டார். நான் அந்த நோக்கில் அதைப் பார்க்கவில்லையே என்றார் அவர். அப்படியானால் நீ வீட்டிற்குச் சென்று அது குறித்து சிந்தனை செய் என அனுப்பி வைத்தார் சின்கான்.

மனம் படைத்த ஒரே காரணத்தால் நாம் மனிதன் என்று அழைக்கப்படுகிறோம். இந்த மனத்தைக் கொண்டுதான் இந்த உலகை அறிந்து கொண்டு ஞானம் அடைய வேண்டும். இந்த ஞான நிலையில்தான் புல் பூண்டு மரம் செடி என அனைத்தும் இருக்கின்றன. ஆனால் அதைப் பற்றி அவைகளுக்கு ஒன்றும் தெரியாது. அதைப் பற்றித் தெரிந்து கொள்ள மனம் வேண்டும். எந்த மனம் ஞானத்தை அடையத் தடங்கலாக இருக்கிறதோ அந்த மனம்தான் அதை அடையவும் தேவையாகவும் இருக்கின்றது என்று சொல்கிறார்கள். எனவே அந்த மனத்தால் இயற்கையின் மகத்துவத்தை உணர்ந்து அந்த இயற்கையைப் பாதுகாப்போம்.








All the contents on this site are copyrighted ©.