2011-01-15 13:11:53

திருத்தந்தை : கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயான ஒன்றிப்பு இறைச் செயலின் கனியாகக் கிடைப்பது


சன.15,2011. கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயான ஒன்றிப்பு அச்சபைகளின் கடும் முயற்சிகள், இடைவிடாத செபம் ஆகியவற்றைச் சார்ந்து இருந்தாலும் அது இறைச் செயலின் கனியாகக் கிடைப்பது என்பதை நாம் மறக்கக் கூடாது என்று ஃபின்லாந்து லூத்தரன் சபைப் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

புனித ஹென்ரி விழாவை முன்னிட்டு உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ள ஃபின்லாந்து லூத்தரன் சபைப் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இந்தத் திருப்பயணம் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கு ஊக்கமூட்டுவதாய் இருக்கின்றது என்றார்.

ஃபின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளிலுள்ள லூத்தரன்-கத்தோலிக்க உரையாடல் குழு, “திருச்சபையின் வாழ்வில் ஏற்புடைமை” என்ற தலைப்பில் அண்மையில் தயாரித்துள்ள அறிக்கை பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, திருச்சபையின் இயல்பு, ஆயர் பணி ஆகியவை குறித்தப் பொதுவான நோக்குப் பற்றி அறிவதற்கு இவ்வறிக்கை உதவுகிறது என்றும் கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பாதை சில வழிகளில் கடினமானதாகவும் அதிகச் சவால்கள் கொண்டதாகவும் இருக்கின்றது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் தொடங்கவிருக்கும் இவ்வேளையில் மிகுந்த அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த பாதையில் நாம் செல்வதற்குத் தூய ஆவியிடம் செபிப்போம் என்று கூறினார்.

ஆண்டு தோறும் சனவரி 18 முதல் 25 வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைபிடிக்கப்படுகின்றது.

ஃபின்லாந்து பாதுகாவலர் மறைசாட்சியான புனித ஹென்ரியின் விழா சனவரி 19ம் தேதி கொண்டாடப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.