2011-01-15 13:15:44

இலங்கை ஆயர் : அரசு ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களைக் கொன்று குவித்தது என்பதை ஏற்க வேண்டும்


சன.15,2011. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைவதற்கு முன்னான இறுதி ஐந்து மாதங்களில் அந்நாட்டு அரசு ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களைக் கொன்று குவித்தது என்பதை அவ்வரசு ஏற்க வேண்டுமென்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதி்யைச் சேர்ந்த ஆயர் ஒருவர் கூறினார்.

இலங்கையில் 2009ம் ஆண்டில் முடிவடைந்த போரின் இறுதிக் கட்டத்தில் கடும் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றன என்ற பரவலானக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள அரசின் சிறப்புக் கமிஷனிடம் இவ்வாறு கூறினார் மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு.

வலுக்கட்டாயமாக மக்கள் கடத்தப்படல், காணாமற்போதல், சட்டத்துக்குப் புறம்பேயான கொலைகள், திட்டமிட்ட கைதுகள், சித்ரவதைகள், குண்டுவீச்சுகள், குடிமக்களின் இருப்பிடங்களில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் போன்ற சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதன் உண்மை பொதுப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று ஆயர் ஜோசப் கூறினார்.

போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்ட மக்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமல் இம்மக்கள் ஒப்புரவுப் பாதையில் நடக்க முடியாது என்றும் இம்மக்கள் எந்தவிதமான ஒப்புரவுப் பாதையில் நம்பிக்கை வைக்கமாட்டார்கள் என்றும் ஆயர் தெரிவித்தார்.

போரின் கடைசி ஐந்து மாதங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள், இவர்களில் பெரும்பகுதி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார் மன்னார் ஆயர் ஜோசப்.

இலங்கையில் 1983ம் ஆண்டில் தொடங்கிய உரிமைப் போரில் சுமார் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.