2011-01-14 15:28:22

திருத்தந்தை : அரசியல், சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் மனிதன் மையப்படுத்தப்பட வேண்டும்


சன.14,2011. மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களைக் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் இடமாக அமையும் குடும்பங்கள் உறுதியான கொள்கைகள் மூலம் பாதுகாக்கப்படுவதற்கு அரசு அதிகாரிகள் ஆவன செய்யுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.

பெற்றோரின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, குடும்பம், வேலை இவை இரண்டையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழலில் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளக் காலம் தாழ்த்தும் பெண்களுக்கு ஆதரவாகக் கிறிஸ்தவ சமூகமும் உரோம் நகரும் லாத்சியோ மாகாணமும் எடுத்து வரும் முயற்சிகளுக்குத் தனது பாராட்டையும் தெரிவித்தார்.

லாத்சியோ மாகாணம், உரோம் மாநகராட்சி, உரோம் பகுதி ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட அதன் அலுவலகர்களைப் புத்தாண்டை முன்னிட்டு இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, குடும்பங்கள், திருமண வாழ்வு, முதுமை ஆகியவை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்துப் பேசினார்.

அதிகரித்து வரும் வயதானவர் எண்ணிக்கை புதிய பிரச்சனைகளை முன்வைக்கிறது என்ற அவர், முதியவர் சமுதாயத்துக்கு பெரிய சொத்து என்றும் இவர்கள் அக்கறையுடன் கவனிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் மனிதன் மையப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் மதித்து அனைவரின் உண்மையான நலனை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் இறைவார்த்தையைத் துணையாகக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.