2011-01-12 15:59:57

மத்தியக்கிழக்குப் பகுதிகளில் கிறிஸ்தவர்களின் பிரசன்னம் இன்றியமையாதது - பாலஸ்தீனிய பிரதமர்


சன.12, 2010. மத்தியக்கிழக்குப் பகுதிகளில் கிறிஸ்தவர்களின் பிரசன்னம் இன்றியமையாதது என்று பாலஸ்தீனிய பிரதமர் கூறினார்.
புனித பூமியைக் காக்கும் அமைப்பு ஒன்றின் ஆண்டு கூட்டத்தில் இச்செவ்வாயன்று கலந்து கொண்ட பாலஸ்தீனிய பிரதமர் Salam Fayyad இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவர்களின் பிரசன்னம் பாலஸ்தீன நாடு வளர்வதற்கு மிக முக்கியம் என்று பிரதமர் வலியுறுத்திக் கூறினார். கிறிஸ்தவர்கள் இல்லாத புனித பூமியை எவ்விதம் நினைத்துப் பார்க்க முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
புனித பூமி காக்கும் அமைப்பு என்பது திருப்பீடத்தின் வேண்டுகோளுக்கிணங்க, இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் ஒரு முயற்சியாக 1998ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இந்த அமைப்பில் ஐரோப்பாவின் பல நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா ஆகிய நாடுகளின் ஆயர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அண்மையில் ஈராக், எகிப்து ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகள் கண்டனத்திற்குரியது என்று கூறிய பிரதமர் Fayyad, மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள பல நாடுகளில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் பல நூற்றாண்டுகளாக சமரசமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டினார்.பாலஸ்தீனிய அரசு திருச்சபையுடன் இணைந்து மத்தியக்கிழக்குப் பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்விப் பணியில் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதென்றும் பிரதமர் Fayyad உறுதி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.