2011-01-12 15:59:12

அகில இந்திய பெண்துறவியர் கருத்தரங்கின் முடிவுகள்


சன.12, 2010. இன்றைய உலகின் போக்குகளுக்கு எதிர் சாட்சிகளாய் வாழ்வதே துறவறத்தாரின் அழைப்பு என்று இந்தியப் பெண்துறவியரின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் பணி புரியும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்துறவியரின் பிரதிநிதிகளும், தலைவிகளும் மூன்றாடுகளுக்கு ஒருமுறை கூடும் அகில இந்திய பெண்துறவியர் கருத்தரங்கு கொச்சியில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது.
கொச்சியில் இச்செவ்வாயன்று நிறைவுபெற்ற இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட 450க்கும் மேற்பட்ட துறவுசபைத் தலைவிகள் கருத்தரங்கின் முடிவில் இக்கருத்தை வெளியிட்டனர்.
இன்று உலகில் பெருமளவு பெருகியுள்ள தொடர்புசாதனங்கள், செல்வம், தொழில்நுட்பம் ஆகிய அனைத்தும் உயிர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கைப் பெரிதும் உருவாக்கி வருகின்றன என்றும், இப்போக்கிற்கு மாற்று சாட்சிகளாக துறவறத்தார் வாழ வேண்டியது அவசியம் என்றும் இக்கருத்தரங்கின் முடிவு கூறுகிறது.
பெண்களுக்கு, முக்கியமாக, பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைய பல்வேறு பெண் துறவுசபைகளும் ஒருங்கிணைந்து பணி செய்ய வேண்டும் என்ற முடிவும் இக்கருத்தரங்கில் வெளியானது.பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கேட்பதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முறையீடு அமைப்புக்கள் (grievance cell) உருவாக்கப்பட வேண்டுமென்ற மற்றொரு முடிவும் எடுக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.