2011-01-11 15:22:31

அரசியலில் அல்ல, மாறாக மக்களின் வாழ்வில் கவனம் செலுத்துங்கள் என்கிறார் பேராயர் துவால்.


சன 11, 2011. மத்தியக்கிழக்குப்பகுதியின் அரசியல் சூழல்களை மாற்ற திருச்சபைத் தலைவர்களால் இயலாது எனினும், மக்களின் வாழ்வில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த இயலும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் எருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal.

புனித பூமிக்கான ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெறும் கானடா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, இஸ்பெயின், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுடன் ஆன கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்த பேராயர் Twal, இறைவனின் கண்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படும் மத்தியக் கிழக்குப்பகுதி திருச்சபையை அன்பு கூர்ந்து, ஆதரவளித்து அதனுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்க வேண்டியது அகில உலக திருச்சபையின் கடமையாகிறது என்றார்.

கிறிஸ்தவர்களையும் அவர்களின் கோவில்களையும் தாக்கும் இஸ்லாமிய குழுக்கள் மற்றும் எருசலேமின் இடங்களைச் சிறிது சிறிதாக ஆக்ரமித்து வரும் யூத வலதுசாரி குழுக்கள் என இரு தீவிரவாதக் குழுக்களால் மத்தியக்கிழக்குப்பகுதி வாழ் கிறிஸ்தவர்களின் வாழ்வு அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார் எருசலேமின் லத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Twal.

அரசியல் சூழலை மாற்றக்கூடிய சக்தியற்று இருக்கும் தலத்திருச்சபை, தன் நேரம், சக்தி மற்றும் வளங்களைக்கொண்டு மக்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் கொணர உழைக்க முடியும் என்றார் அவர்.








All the contents on this site are copyrighted ©.