2011-01-10 14:08:13

திருத்தந்தை : சமய சுதந்திரம் மனிதனின் அடிநாளத்தையே தொடுவதால் அது மதிக்கப்பட வேண்டும்


சன.10,2011. பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டம் அந்நாட்டில் சிறுபான்மை மதத்தவர்க்கெதிரான அநீதி மற்றும் வன்செயல்களுக்கானச் சாக்குப் போக்காக அமைவதால் அச்சட்டத்தை இரத்து செய்வதற்குத் தேவையான முயற்சிகளை எடுக்குமாறு அந்நாட்டு அதிகாரிகளைத் தான் ஊக்கப்படுத்துவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பாகிஸ்தானின் பஞ்சாப் ஆளுனர் கொடூரமாய்க் கொல்லப்பட்டது இந்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் உடனடித் தேவையைச் சுட்டிக் காட்டுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இத்திங்களன்று திருப்பீடத்துக்கான உலக நாடுகளின் தூதர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, நாடுகளில் சமய சுதந்திரம் மதிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

ஈராக்கில் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் கிறிஸ்தவக் குடும்பங்கள் தற்போது அந்நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த கவலை தருவதாகவும் இந்த மக்கள் அந்நாட்டுச் சமுதாயத்தில் முழுவதுமாக இணைக்கப்பட்டு இவர்கள் தொடர்ந்து அங்கு வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டுமெனவும் ஈராக் அரசு அதிகாரிகளுக்கும் முஸ்லீம் மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.

மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் பூர்வீகமாக வாழ்பவர்கள் மற்றும் அவர்கள் அப்பகுதியின் உண்மையான குடிமக்கள் என்பதால் அவர்கள் குடியுரிமை, மனச்சான்றின் உரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி உரிமை, சமூகத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை ஆகியவற்றை அனுபவிக்க வேண்டியது தன்னிலே இயல்பானது என்றும் அவர் கூறினார்.

அமைதியான சமூக உறவுகளின் மரபுகளைக் கொண்டிருக்கும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒவ்வொரு மனிதன் மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவதற்குப் பல்சமய உரையாடல் இன்றியமையாதது என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆப்ரிக்காவிலும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் இடம்பெறாமல் இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், கிறிஸ்துவின் பிறப்புக் கொண்டாடப்பட்ட தினத்தில்கூட நைஜீரியாவில் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன என்றார்.

இச்சமயத்தில் சீனாவில் கடும் சோதனைகளை எதிர்கொள்ளும் கத்தோலிக்கச் சமூகம் மற்றும் அதன் மேய்ப்பர்களை நினைப்பதாகத் தெரிவித்தத் திருத்தந்தை, திருப்பீடத்துக்கும் கியூபாவுக்குமிடையேயான தடைபடாத 75 வருட தூதரக உறவு 2010ல் சிறப்பிக்கப்பட்டதை நினைவுபடுத்தி அந்நாட்டு அதிகாரிகளுக்குத் தான் உற்சாகப்படுத்துவதாகக் கூறினார்.

பல நாடுகளில் அரசியல் அமைப்புரீதியாகச் சமய சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், துறவறக் குழுக்களின் வாழ்வு கடினமானதாகவே இருக்கின்றது என்றும் சமயம் ஓரங்கட்டப்படுகின்றதென்றும் சமய சுதந்திரம் வழங்கப்படுதல் என்பது சமயக் குழுக்கள் தங்களது சமூக, பிறரன்பு மற்றும் கல்விப் பணிகள் மூலமாக அச்சுதந்திரத்தைச் செயல்படுத்த உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

சில இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பள்ளிகளில் அரசு ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ள சூழலில் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதற்கானத் தீர்மானம் எடுக்கக் கூடிய அளவுக்கு அவற்றின் உரிமைகள் மதிக்கப்படும் முறையில் கல்வி அமைப்புகளை அரசுகள் ஊக்குவிக்குமாறு தான் அழைப்பு விடுப்பதாகவும் திருத்தந்தை திருப்பீடத்துக்கானத் தூதர்களிடம் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.