2011-01-10 12:33:35

அறிவை இழப்பதற்கா ஆன்மீகம்?


சன.10,2011. “St.Death” “புனித மரணத்தை” வழிபடும் பழக்கத்தைக் கைவிடுங்கள். இம்மாதிரியான வழிபாடு மூட நம்பிக்கையோடும் சாத்தானோடும் தொடர்புடையது. இந்த வழிபாட்டை ஊக்குவித்து பரப்புகிறவர்கள் அப்பாவி மக்களின் “அறியாமையிலிருந்து” ஆதாயம் தேடுகிறார்கள். இந்தப் புனித மரண வழிபாடு, திட்டமிட்டக் குற்றக்கும்பல், பெரும் போதைப் பொருள் வியாபாரிகள், கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு மிகவும் பிடித்த வழிபாடாக மாறி வருகிறது. இந்த வழிபாட்டு அமைப்பின் தலைவரே தன்னை ஒரு சாத்தானாக உருவகம் செய்கிறார். இது மிகவும் ஆபத்தானது. பல மெக்சிகோ மக்களுக்கு இந்த வழிபாடு என்னவென்றே தெரியவில்லை. புனித மரணம் மற்றுமொரு புனிதை என்று இவர்கள் கருதுகின்றனர். அந்த அளவுக்கு மக்களின் அறியாமை இருக்கின்றது. மக்களே, புனித மரணம் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எந்த விதமான உருவகங்களையும் அழித்து விடுங்கள். அதிலிருந்து விடுபட்டு வெளியேறினால் பழிவாங்கப்படுவோம் என்று பயப்படாதீர்கள். ஏனெனில் கடவுளின் வல்லமை தீமையைவிட மிக மிக மேலானது. எனவே இந்த வழிபாட்டுப் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

இவ்வாறு மெக்சிகோ நகர் உயர்மறைமாவட்ட பேச்சாளர் அருட்திரு ஹூகோ வால்டெமார் மெக்சிகோ மக்களுக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தப் “புனித மரண” கிறிஸ்தவப் பிரிவினைவாதக் குழுவின் தலைவர் டேவிட் ரோமோ இம்மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டதையொட்டி அருட்பணியாளர் வால்டெமார் இந்த விண்ணப்பத்தை முன்வைத்திருக்கிறார். ஒரு வயதான தம்பதியரையும் மற்றோர் ஆளையும் கடத்தியக் குற்றச்சாட்டில் ரோமோவும் இன்னும் எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓர் எலும்புக்கூடு ஒரு புல்லரிவாளை ஏந்தியபடி இருக்கும் உருவத்தை இந்தப் பிரிவினர் வழிபடுகின்றனர். மெக்சிகோவில் இப்பிரிவில் தற்சமயம் சுமார் மூவாயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

இந்தப் “புனித மரண” கிறிஸ்தவப் பிரிவு போன்று ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் மதங்களில் எத்தனையோ பிரிவினைவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இவை மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களது வாழ்வைப் பாழடிக்கின்றன. அதேசமயம் தங்களது பணபலத்தை வலுப்படுத்திக் கொள்கின்றன. தென் கொரியாவில் Jesus Morning Star வழிபாட்டுப் பிரிவின் தலைவர் Jeong Myeong-seok, கற்பழிப்புக் குற்றச்சாட்டில் 2007ம் ஆண்டிலிருந்து கம்பி எண்ணி வருகிறார். இவர், இப்பிரிவைச் சேர்ந்த பல பெண்களுடன் வலுக்கட்டாயமாகப் பாலுறவு கொண்டார், பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆன்மீகத்தின் பெயரில் இப்படியான அட்டூழியங்கள் தமிழகத்திலும் நடப்பது நாம் அறிந்ததே. எத்தனைமுறை செய்திகள் கசிந்தாலும் மக்கள் தங்களது அறியாமையைப் போலிச் சாமியார்களிடம் தொலைத்து வருவது மட்டும் குறைவதாகத் தெரியவில்லை. எங்கள் ஊழியத்துக்கு நிதியுதவி செய்யுங்கள் என்று சில ஆன்மீகவாதிகள் தொலைக்காட்சிச் சேனல்களில் தொடர்ந்து விளம்பரம் செய்வதைப் பார்க்கிறோம். ஒருவரின் ஆன்மீகச் சேவையால் மக்கள் உண்மையிலே பலன் அடைந்தால் அவர்கள் கேட்காமலே நிதி உதவி கிடைக்கும் அல்லவா?. எனவே அன்பர்களே, ஆன்மீகம் என்ற பெயரைச் சொல்லி ஏமாற்றும் ஆசாமிகளிடம் ஏமாறாதீர்கள். அவர்களிடம் உங்கள் அறியாமையை விற்று விடாதீர்கள். எதையும் சிந்தித்து முடிவெடுங்கள்.

“அப்பாவி மக்களின் அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்”. வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மெக்சிகோ நகர் அருட்பணியாளர் வால்டெமார் கூறிய இந்தக் கூற்று நம்மைச் சற்று அதிகமாகவே இன்று சிந்திக்க வைத்தது. இம்மாதிரி அப்பாவிகளின் “அறியாமை”, அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம் என்ற பாகுபாடின்றி, நாட்டுக்கு நாடு, சாதிக்குச் சாதி என எங்கும் எல்லாவற்றிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அப்பாவிகளின் அறியாமை, பதவிக்கும் பணத்துக்கும் குற்றக்கும்பல்களின் செயல்களுக்கும் பெரும் உதவி என்பதை உணர்ந்து அவர்களை அந்த “அறியாமையிலேயே” வைத்துவிடவும் அரசியல்வாதிகளும் மற்றவர்களும் இமாலய முயற்சிகள் எடுப்பதையும் நம்மால் மறுக்க முடியாது.

இந்தியாவில் தமிழகம் உட்பட சில மாநிலங்கள் சட்டப்பேரவைக்கானத் தேர்தல் வேலைகளைத் தொடங்கி விட்டன. தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இத்திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது. இஞ்ஞாயிறன்றுகூட சேலத்தில் ஒரு கட்சி பிரமாண்டமானக் கூட்டத்தைக் கூட்டியது. கட்சிகள் தேர்தல்நிதி வசூலிக்க அப்பாவித் தொண்டர்களைக் களமிறக்கத் தொடங்கிவிட்டன. இங்கு அப்பாவித் தொண்டர்கள் தங்களது அறியாமை விலைபேசப்படுகின்றது என்ற விழிப்புணர்வு இல்லாமலே தேர்தல் வேலையில் இறங்குகின்றனர் என்பது நம்மைச் சங்கடப்படுத்துகின்றது. அப்பாவித் தொண்டர்களே, வாக்காளர் பெருமக்களே, நாட்டுக்காக நல்லது செய்த தியாகிகளில் பலர் கடைசிக் காலங்களில் நாட்டினரால் மறக்கப்படுகின்றனர், ஒதுக்கப்படுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?. தியாகிகளுக்கே இந்நிலை என்றால், உங்களுக்கு?

இஞ்ஞாயிறன்றுகூட இதேமாதிரியான ஒரு செய்தியை தினத்தாள் ஒன்றில் வாசித்தோம். 1921-ல் மகாகவி பாரதி இறந்தபோது மிகக் குறைவானவர்களே வந்திருந்தனர் என்பது இன்றும் வருத்தத்துடன் அடிக்கடி நினைவுகூரப்படும் ஒரு செய்தி. ஆனால், 90 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதும்கூட இந்நிலைமையில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. இந்தச் சனவரி இரண்டாம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மிகப்பெரிய விடுதலைப் போராட்ட தியாகி ஜி.எஸ். இலட்சுமண அய்யர் தனது 94-வது வயதில் மறைந்தார். அவரது மறைவு கேட்டு அவரது இல்லத்துக்கு சுமார் 25 பேர் வந்து இருந்தனர். சாதி, மதப் பாகுபாடு எதுவுமின்றி இந்தப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் அய்யரைப் பார்க்கலாம். 1952 முதல் 55 வரையிலும் 1986 முதல் 92 வரையிலுமாக இரண்டு முறை கோபி நகர்மன்றத் தலைவராகவும் இருந்தவர் அய்யர். 1955-ல் இவர் கொண்டுவந்ததுதான் கோபி நகர்க் குழாய்த் திட்டம். 1986-ல் இவருடைய காலத்தில்தான் கோபிசெட்டிபாளையத்தில் முதன்முதலாக மனிதக் கழிவை மனிதன் சுமக்கும் அவலம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அரசு நிதியுதவியுடன் அனைத்து உலர்க் கழிப்பிடங்களும் நீரடிக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்டன.

ஒருமுறை இந்த இலட்சுமண அய்யர் சொல்லியிருக்கிறார் : இன்று இந்தியாவில் காந்தியைப் போல, காமராஜரைப் போல கையெடுத்துக் கும்பிடக்கூடிய தலைவர்கள் யாரும் இல்லை. இன்று அத்தனை பேரும் ஆடம்பரத்திலும் விளம்பரத்திலும் சுயநலத்திலும்தான் மயக்கம் கொண்டிருக்கிறார்கள். எந்த வழியிலாவது சம்பாதிப்பதையும் பிழைப்பதையுமே பெரிதாகக் கொண்டிருக்கிறார்கள். தியாகத்தைப் பெரிதாகக் கருதும் மக்களும்கூட நாட்டில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று.

அன்பர்களே, தியாகி இலட்சுமண அய்யர் பற்றிய மேலும் சில தகவல்களைச் செய்தியில் வாசித்தோம். இம்மாதிரியான நிலைமையைப் பார்த்தும், கேட்டும்கூட கட்சிக்காவும் கட்சித் தலைவர்களுக்காவும் தங்களது ஹீரோக்களுக்காவும் தீக்குளிக்கும் அப்பாவித் தொண்டர்களை என்ன செய்வது?. நீங்கள் அறியாமையிலிருந்து விழித்தெழ வேண்டிய நேரம் இது. தூங்கிய காலம் போதும். விழித்தெழுங்கள்.

யார் ஒருவருடைய அறியாமையிலிருந்து இலாபம் சம்பாதிக்கிறார்களோ, யார் அந்த அறியாமையை ஊக்குவிக்கிறார்களோ, அந்த அறியாமையிலேயே இருப்பதற்கு யார் உதவுகிறார்களோ அவர் தண்டனையிலிருந்து தப்பிக்கவே கூடாது. தனக்கு எல்லாம் தெரியும் என்று வெளியே காட்டிக் கொள்பவர்கள் அல்லது சில விவகாரங்கள் பற்றிய அறிவு தனக்கு அதிகமாகவே இருக்கின்றது என்று நடிப்பவர்கள் - இவர்களால்தான் அறியாமையில் வாழும் மக்கள் கடும் கோபத்துக்கு உள்ளாகிறார்கள். வெளிநாடுகளில் நல்ல வேலைத் வாங்கித் தருவதாகச் சொல்லும் ஏமாற்று ஏஜெண்டுகளிடம் மோசம் போகும் ஏழைகளின் கோபம் நமக்குத் தெரியாததல்ல. ஏமாற்றுப் பேர்வழிகளே உங்களின் சாயம் விரைவில் வெளுத்துவிடும் என்பதை ஏன் நீங்கள் அடிக்கடி மறந்து போகின்றீர்கள்?.

புகழ்பெற்ற ஒரு மடாலயத்தின் தலைவராக இருந்த துறவி இறந்தார். அவருக்குப் பின்னர் வேறொரு துறவி பொறுப்பேற்றார். அதுவரையில் அம்மடாலயத்தில் இருந்த எல்லா முறைகளையும் புதியவர் மாற்றினார். அங்கிருந்த சீடர்கள், இவர் இறந்த குரு மாதிரி இல்லையே என்று முணுமுணுத்தனர். ஆனால் யாரும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இத்தகைய சூழலில் வேறொரு துறவி அங்கு வந்து சில நாட்கள் தங்கினார். இவருக்கு இறந்த குருவையும் நன்றாகத் தெரியும். எனவே ஒருநாள் அவர் புதியவரிடம் நீங்கள் பழையவர் போல் இல்லை என்று பேசிக் கொள்கிறார்கள் என்றார். புதிய தலைமை மௌனமாக இருந்தார். அப்பொழுது அநதத் துறவி, உங்கள் மௌனத்தின் அர்த்தம் புரிகிறது. வெறும் வதந்திகளுக்குப் பதிலளிக்க வேண்டியது இல்லைதான். ஆனாலும் எனது கேள்வி என்னவென்றால் நீங்கள் இறந்த குரு போன்றவர்தானா என்பதே. அதற்கு ஆம் என்றார் அவர். எப்படி என அவர் கேட்க, இறந்த குரு யாரையும் பின்பற்றியதில்லை. அவர் தனது மனதில் தோன்றியதைச் செய்தார். நானும் அதையேதான் செய்கிறேன் என்றார். வந்தவர் மௌனமானார்.

“மாறுதல் என்பது எல்லாவற்றிலும் கணத்துக்குக் கணம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியிருக்க நம்மால் ஏற்க முடியாததை மரபு என்றும் முன்னோர் சொன்னது என்றும் குரு, சாஸ்திரம் என்றும் வாய்மூடி மௌனமாய் ஏற்பதைவிட அவற்றை உதறிவிடுவதே மேல். உன் இயல்பில் இரு. உனது ஆழ்மனக் குரலைக் கேள்” என்கின்றனர் ஆன்மீகவாதிகள். வள்ளுவரும், தன்நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின், தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்றார்.

எனவே அன்பர்களே, உங்கள் அறியாமையைப் பிறர் பயன்படுத்த எந்நேரத்திலும் எவ்விதத்திலும் அனுமதியாதிருப்பதில் உறுதியாய் இருங்கள். நீங்களே உங்கள் எஜமான். உங்களது ஆழ்மனக் குரலைக் கேளுங்கள். அந்த ஆன்மாவின் குரல் உங்களில் எப்பொழுதும் உறைந்து உங்களது உந்து சக்தியாக இருக்கும். உங்களை நேரிய வழியில் நடத்தும்.








All the contents on this site are copyrighted ©.