2011-01-08 14:45:53

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8% ஆக இருக்கும் : ஐஎம்எப்


சன.08,2011. கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டும் ஆசியாவில் சீனாவும் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் நிற்கும் என்று பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எப்) அதிகாரிகள் கூறுகின்றனர்.

2010ம் ஆண்டில் 8 விழுக்காடாக இந்த இவ்வளர்ச்சி, இந்த 2011ம் ஆண்டில் 7 விழுக்காடாகக் குறையும் என்று அவ்வதிகாரிகள் கூறினர்.

மேலும், 2010-11ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 விழுக்காடாக உயரும் என்று கூறியுள்ள அவ்வதிகாரிகள், உணவுப் பொருட்கள் விலையேற்றத்தினால் பணவீக்கம் ஒரு சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு வெளியிட்ட அறிக்கையில் பன்னாட்டு நாணய நிதியம் இந்தத் தகவல்களை அளித்துள்ளது.

“விவசாய உற்பத்தியும், உள்நாட்டுப் பயன்பாட்டு அதிகரிப்பும், வேலை வாய்ப்பு உருவாக்கமும், வருமான பெருக்கமும் செலவும் சேர்ந்து இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 8.8 விழுக்காட்டிற்கு உயர்த்தும்” என்று ஐ.எம்.எப் அறிக்கை கூறுகிறது.

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் அதே வேளையில் உயர்ந்துவரும் விலைவாசி, குறிப்பாக உணவுப் பொருள் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிப்பதனால், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இந்திய மைய வங்கி மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஐ.எம்.எப். கூறியுள்ளது.

டிசம்பர் 25ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 18.32 விழுக்காடாகவும், ரூபாயின் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 7.48 விழுக்காடாகவும் உள்ளது. இந்த ஒராண்டில் மட்டும் இந்தியாவின் பங்குச் சந்தைகளில் செய்யப்பட்ட அந்நிய முதலீடுகள் 39 பில்லியன் டாலராகும். இது கடந்த ஆண்டு 18 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.