2011-01-07 15:18:31

ஜனவரி 08. வாழ்ந்தவர் வழியில்...........


ஜனவரி 8, தியாகத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கும் மாக்ஸ்மிலியனின் பிறந்த நாள். ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போலந்து பகுதியில் 1894ம் ஆண்டு பிறந்த மாக்ஸ்மிலியன், பிரான்சிஸ்கன் சபை துறவியாகி, நாத்ஸிக் கொடுமைகளுக்கு எதிராக தன் குரலை எழுப்பி, யூதர்களுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவரின் தந்தை ஜெர்மனியையும், தாய் போலந்தையும் சேர்ந்தவர்கள். இவர் சில கைதிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஒரு கைதி தப்பியோடி விட, அதனால் கோபம் கொண்ட நாத்ஸி படைவீரர்கள், மற்றவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என விரும்பி, 10 சிறைக்கைதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவும் நீரும் வழங்காமல் கொடுமைப்படுத்தினர். இதில் ஃப்ரான்சிசெக் கஜொவ்னிசெக் என்ற கைதி, தன் மனைவியையும் குழந்தைகளையும் எண்ணி பெருங்குரலெடுத்து அழுதபோது, இவரே முன்வந்து அந்தக் கைதிக்குப் பதிலாக தான் உணவின்றி வாடத் தயாராக இருப்பதாக சிறைக்காவலர்களிடம் மன்றாடினார். மாக்ஸ்மிலியனின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அந்தக் கைதிப் பட்டினிச்சாவு மரணத்திலிருந்து தப்பினார். ஒன்பது பேரும் ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவ இவர் மட்டுமே இறுதியில் உயிரோடு இருந்தார். இதனால் இவரை விஷ ஊசி போட்டு கொல்லத் தயாராயினர் இராணுவத்தினர். விஷ ஊசி கொண்டுவரப்பட்டபோது இவர் அமைதியாக தன் இடது கையைத் தூக்கி, முகத்தில் மலர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக இதைப் பார்த்த கைதிகள் சாட்சி பகர்ந்துள்ளனர். தனக்கு முன் பின் பழக்கமில்லாத ஒரு கைதிக்காக தன் உயிரையே கையளித்து அவரைக் காப்பாற்ற முன் வந்த இந்தக் குரு இன்று திருச்சபையில் ஒரு புனிதர். தியாகத்திற்கும் பிறரன்பிற்கும் ஓர் உயரிய எடுத்துக்காட்டாய் விளங்குகிறார் புனித மாக்ஸ்மிலியன் கோல்பே.








All the contents on this site are copyrighted ©.