2011-01-06 15:23:22

பாகிஸ்தான் பேராயர் - தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் தனது வாழ்வை ஆபத்தில் வைக்கிறார்


சன.06,2011. பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் தனது வாழ்வை ஆபத்தில் வைக்கிறார் என்று அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான லாகூர் பேராயர் இலாரன்ஸ் ஜான் சல்தான்ஹா கூறினார்.

பாகிஸ்தானில் தேவநிந்தனை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த பஞ்சாப் மாநில ஆளுநர் சல்மான் தசீர் அவரது மெய்காப்பாளரால் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் சல்தான்ஹா இவ்வாறு கூறினார்.

தேவநிந்தனை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபியின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தது மற்றும் அந்நாட்டில் தேவநிந்தனைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டுமென்று வெளிப்படையாகப் பேசி வந்ததுமே தசீர் கொல்லப்பட்டதற்கான முக்கிய காரணம் என்று தான் கருதுவதாகக் கூறினார் பேராயர்.

மேலும், பாகிஸ்தான் அரசியல்வாதி சல்மான் தசீர் கொலை செய்யப்பட்டது குறித்து இந்திய திருச்சபை நிறுவனங்களும் தங்களது வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.