2011-01-06 15:28:35

சனவரி 7- வாழ்ந்தவர் வழியில்


“நீ உன்னுடைய மூதாதையர் போன்று புகழ் பெற்ற மருத்துவராக வேண்டும். உன்னுடைய புகழானது இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவ வேண்டும். உன் தம்பிகளுக்கு நீ வழிகாட்டியாக இருக்க வேண்டும். நம்முடைய குலப்பெருமையை நிலைநாட்ட வேண்டும். சிறிதளவும் சோர்ந்து போகாதே. வெற்றிப் பாதையில் சற்றும் பின்வாங்காமல் முன்னேறு. உன்னைச் சிறந்த மருத்துவன் என்று இந்த உலகம் போற்றிப் புகழும்படியாக முன்னேறிக் கொண்டிரு.” இவை இத்தாலிய அறிவியலாளரான கலிலீயோ கலிலிக்கு அவரின் தந்தை கூறிய அறிவுரைகள்.

தனது தந்தையின் விருப்பப்படி மருத்துவம் படித்துக் கொண்டிருந்த இவர் தனது இருபதாம் வயதில் ஒருநாள் பேராலயத்தில் ஒரு விளக்குச்சரம் ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்ததைக் கவனித்தார். தனது நாடித் துடிப்பையே கடிகாரமாகக் கொண்டு இது முன்னேயும் பின்னேயும் போவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கின்றது என்பதைக் கணக்கிடத் தொடங்கினார். இதன் பயனாக பெண்டுலம் கொள்கையைக் கண்டுபிடித்தார். அது முதல் மருத்துவத்தை மறந்தார். ஆயினும் தந்தையின் விருப்பப்படி உலகம் போற்றிப் புகழும்படியாக வாழ்ந்தவர். "இயற்பியலின் தந்தை", அறிவியலின் தந்தை, "நவீன வானியலின் தந்தை" என்றெல்லாம் அழைக்கப்படுபவர் கலிலீயோ. அறிவியல் புரட்சியோடு நெருக்கமான தொடர்புடைய வானியிலாளர். இவர் கணிய அளவுப் பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளைக் கணித முறையில் பகுப்பாய்வு செய்வதையும் தொடங்கி வைத்தவர். திடப்பொருளின் புவியீர்ப்புத்தானம் பற்றி இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையைப் படித்த அறிஞர்கள் அவை நவீன ஆர்க்கிமிடிஸ் என்று பாராட்டினார்கள். இவர் 1610ம் ஆண்டு சனவரி 7ம் தேதி வலுக்குறைந்த தொலைநோக்கியைக் கொண்டு வியாழனைச் சுற்றி நான்கு துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டறிந்தார். 1564ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பிறந்த கலிலீயோ கலிலி, 1642ம் ஆண்டு சனவரி 8ம் தேதி தனது 78வது வயதில் ஃபிளாரன்ஸ் நகரில் இறந்தார்.







All the contents on this site are copyrighted ©.