2011-01-05 15:30:48

வியட்நாம் திருச்சபையின் ஜுபிலி கொண்டாட்டங்கள்


சன.05, 2011. வியட்நாம் திருச்சபையின் ஜுபிலி கொண்டாட்டங்கள் அந்நாட்டின் புகழ்பெற்ற La Vang மரியாவின் திருத்தலத்தில் இச்செவ்வாயன்று ஆரம்பமாயின.
பல்லாயிரம் மக்கள் கலந்து கொள்ளும் இந்த ஜுபிலி கொண்டாட்டங்கள் வருகிற சனவரி 9ம் தேதி ஞாயிறன்று கர்தினால் ஐவன் டயஸ் தலைமையில் நிறைவுபெறும்.
புனித Dung Lac போன்ற முதல் மறைசாட்சிகளின் இரத்தத்தால் விதைக்கப்பட்ட வியட்நாம் மக்களின் விசுவாசம், இந்த ஜுபிலி ஆண்டின் மூலம் பன்மடங்கு பலன்களைத் தரும் என்று தான் நம்புவதாகத் திருத்தந்தை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
La Vang மரியன்னை திருத்தலத்திற்கு செல்லும் திருப்பயணிகள் குறித்து தற்போதையத் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட்டும், மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலும் பல முறை பேசியிருப்பது குறிப்பிடத் தக்கது.இன்றைய நிலவரப்படி, வியட்நாம் திருச்சபை 26 மறைமாவட்டங்களையும், 2228 பங்கு தளங்களையும் கொண்டது. இந்நாட்டில் தற்போது 80 இலட்சம் கத்தோலிக்கர்கள் உள்ளனர். இவர்களுக்குப் பணி செய்வதற்கு அந்நாட்டில் 2900 குருக்கள், 10000 பெண் துறவியர், 1500 ஆண் துறவியர் மற்றும் 40000 மறை கல்வி ஆசிரியர்கள் உள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.