2011-01-05 15:31:18

மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் விடுதலைக்காக அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களின் போராட்டம்


சன.05, 2011. மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் (Binayak Sen) கடந்த மூன்றாண்டளவாய் சிறை படுத்தப்பட்டுள்ளதை எதிர்த்து அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் இச்செவ்வாயன்று புதுடில்லியில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
புது டில்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இக்குழுவினர் இந்திய வாசலுக்கு (India Gate) முன் மெழுகு திரிகளை ஏந்தி, இரவு கண்விழிப்பு நடத்தினர். Teesta Setalvad என்ற மற்றொரு மனித உரிமை ஆர்வலரையும் விடுவிக்கக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
டில்லி உயர் மறைமாவட்டம், அகில இந்திய கிறிஸ்தவக் கழகம், இந்திய கிறிஸ்தவ சபைகளின் தேசிய அவை ஆகியவை இணைந்து இப்போராட்டங்களில் ஈடுபட்டன.
மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் பல்வேறு வகைகளில் ஒடுக்கப்படுவது ஆழ்ந்த கவலையையும், கலக்கத்தையும் உண்டாக்குகிறது, எனவே இத்தகைய அநீதியான அடக்கு முறைகளைக் கேள்வி கேட்காமல் இருப்பது எங்கள் மனசாட்சிக்கு எதிரானது என்று இவ்வமைப்பினர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
பினாயக் சென், சத்தீஸ்கர் பகுதியில் ஏழைகள் மத்தியில் உழைத்து வந்த மருத்துவர். மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை ஒடுக்குவதாகக் கூறி, அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை சென் கேள்வி கேட்டார் என்பதால் அவர் 2007ம் ஆண்டு சிறைப்படுத்தப்பட்டார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.பினாயக் சென் விடுதலையைக் கோரி, மருத்துவர்களும், மருத்துவம் பயிலும் மாணவர்களும் கொல்கொத்தாவில் போராட்டம் ஒன்றில் அண்மையில் ஈடுபட்டனர்.







All the contents on this site are copyrighted ©.