2011-01-05 15:02:11

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


ஜன 05, 2011. அவ்வப்போது கடுமையான குளிரால் உரோம் நகரம் நடுங்கிக் கொண்டிருந்தாலும், இப்புதனன்று இலேசாக மழை தூறியதால் குளிரின் கடுமை சிறிதளவுக் குறைந்திருக்க, திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் மண்டபத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்குத் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

நம் ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவுக்கு முன் இடம்பெறும், இவ்வாண்டின் இந்த முதல் புதன் மறைபோதகத்தின் வழி உங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை .

இந்நாட்களில் இடம்பெற்ற திருச்சபையின் கிறிஸ்துப் பிறப்பு விழாக்கொண்டாட்டங்கள், கடந்த கால நிகழ்வுகளின் ஞாபகங்கள் மட்டும் அல்ல, மாறாக, நம் வாழ்விலும் இவ்வுலகிலும் தொடர்ந்து இருக்கும் கிறிஸ்துவின் பிரசன்னத்தின் மகிழ்ச்சி நிறை அனுபவமாகும். மனுவுரு எடுத்த இயேசுவில் நம் மீட்பு நிறைவேறியது. இயேசு தன்னையே தாழ்த்திய நிகழ்வானது, அன்னை மரியின் வயிற்றில் கருவானதில் துவங்கி, அவரின் மரணம் மற்றும் உயிர்ப்பு எனும் பாஸ்கா மறையுண்மையில் தன் முழு வெளிப்பாட்டைக் கண்டது. மனுவுரு எடுத்தலையும் மீட்பையும் இணைக்கும் ஆழமான சங்கிலியை நாம் உணர்ந்து பாராட்டுவது என்பது, குடிலில் கிடத்தியிருக்கும் குழந்தை இயேசுவை ஆழ்ந்து தியானிப்பதிலிருந்து நம்மை, திருநற்கருணை எனும் திருவருட்சாதனத்தில் இயேசுவின் உண்மை இருப்பை ஆராதிப்பதை நோக்கி அழைத்துச் செல்கின்றது. தன் மகிமை நிறை தெய்வீக வாழ்வில் பங்குபெறுவதன் மூலம் மனித குலத்தின் உயரிய நோக்கம் நிறைவு பெறவேண்டும் என்பதற்காக மனுவுரு எடுத்த இறைமகனால் நாம் முற்றிலுமாக மாற்றம் பெறவேண்டும் என, கிறிஸ்து பிறப்பு விழாவில் துவங்கி, திருவெளிப்பாட்டுத் திருவிழா வழியாக இயேசுவின் திருமுழுக்கு நோக்கி நம்மை எடுத்துச் செல்லும் இப்புனித காலத்தின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

இவ்வாறு இவ்வாண்டின் தன் முதல் புதன் மறை போதகத்தை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் அனைவருக்கும் தன் ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.