2011-01-05 15:03:37

ஜனவரி 06. வாழ்ந்தவர் வழியில்.....


மகிழ்ச்சி என்பது, முகத்திரை நீக்கிய உங்கள் துன்பம் தான்.

சிரிப்பு பிறக்கும் உங்கள் சொந்தக் கிணற்றை, அடிக்கடி உங்கள் கண்ணீர் நிறைத்துவிடுகின்றது.

அது வேறு எப்படி இருக்க முடியும்?

எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாகத் துன்பம் உங்களைச் செதுக்குகின்றதோ, அந்த அளவுக்கு நீங்கள் நிறைந்த இன்பம் பெறுவீர்கள்.

திராட்சை மதுக் கோப்பையை நீங்கள் ஏந்தி இருக்கிறீர்களே, அது குயவனின் சூளையில் வெந்தது அல்லவா?

உங்களுக்கு ஆன்ம அமைதி தரும் புல்லாங்குழல், கத்திகளால் துளையிடப்பட்டது அல்லவோ?

நீங்கள் மகிழ்ச்சியடையும் போது, உங்கள் இதயத்திற்குள் ஆழ்ந்து பார்த்தால், உங்களுக்கு இன்பம் தருவதெல்லாம், உங்களுக்குத் துன்பம் தந்தவையே என்பதைக் கண்டுகொள்வீர்கள்.

“இன்பம் துன்பத்தைவி்ட மேலானது“ என்று உங்களில் சிலர் சொல்லக்கூடும் “இல்லை துன்பம் தான் பெரிது“ என்று சிலர் சொல்லக்கூடும்.

ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவை பிரிக்கமுடியாதவை.

ஒன்றாகத்தான் அவை வருகின்றன. ஒன்று உங்களுடன் தனியே அமர்ந்துகொள்ளும். மற்றொன்று உங்கள் படுக்கையில் படுத்துக்கொள்ளும்.

உண்மையில், உங்கள் இன்பம், துன்பம் என்ற தட்டுகளுக்கிடையில் ஊசலாடும் தராசு நீங்கள்.

நீங்கள் வெறுமையாகும் போதுதான், அசையாமல் நடுநிலையில் நீங்கள் நிற்கமுடியும்.

இப்படிப் பாடியவர் யார் தெரியுமா?

சேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக உலகத்தில் கவிதைக்காக மதிக்கப்படும் கலில் கிப்ரான்.

அவர் எழுதிய புத்தகங்கள் உலக அளவில் விற்பனையில் மூன்றாம் இடம் வகிக்கின்றன. கலில் கிப்ரான் எழுதிய புத்தகங்கள் ஓவ்வொரு மனிதனின் எண்ணங்களையும் பிரதிபலிப்பபவை.

வட லெபனனில் 1883 ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார் கலில் கிப்ரான். தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர் இவர். தகப்பனார் பொறுப்பற்றவராய் வாழ்ந்து குடும்பத்தை வறுமையில் தள்ளியதால், தாயாரால் ஒதுக்கப் பட்டார். மன ஊக்கமுடைய அன்னை தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார்.

1895 செப்டம்பர் 30 இல் கலில் கிப்ரான் தனது 12 ஆவது வயதில் முதன்முதல் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலம் கற்றார். அந்த வயது முதல் அவரது ஓவியத் திறமை சீராக வெளிப்பட்டு , ஆசிரியர் பலரது கவனத்தைக் கவர்ந்தது. 1897 இல் கலில் கிப்ரான் லெபனனுக்குத் திரும்பி பெய்ரூட்டில் இரண்டு ஆண்டுகள் தங்கி அரேபிய இலக்கியம் கற்றார். கலில் கிப்ரானின் ஆரம்ப காலப் படைப்புகள் அரேபிய மொழியிலும், பிற்காலப் படைப்புகள் ஆங்கிலத்திலும் வடிக்கப்பட்டன. தனது 48 ஆவது வயதில் (ஏப்ரல் 10, 1931) கலில் கிப்ரான் நியூயார்க் நகரில் காலமானர். அவரது உடல் தாய் நாடான லெபனனுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இவரின் கவிதைகளில் இருந்து கற்றக் கொள்ள ஆயிரம் இருக்கின்றன. இதோ உதாரணத்திற்கு ஒன்று,

“ஒவ்வொரு நாளும் நீ வாழும் வாழ்க்கையே உனது ஆலயம்! உனது மதம்!”








All the contents on this site are copyrighted ©.