2011-01-04 16:15:36

விவிலியத் தேடல்


RealAudioMP3
"என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது."
திருப்பாடல் 23ன் 5ம் திருவசனத்தில் இன்று நாம் அடியெடுத்து வைக்கிறோம். புத்தாண்டு புலர்ந்துள்ள இந்த வேளையில் நாம் மேற்கொள்ளும் முதல் விவிலியத் தேடலில் இத்திருவசனம் மனதில் இதமான எண்ணங்களை உண்டாக்குகிறது. நமக்கு இறைவனே விருந்தொன்றை ஏற்பாடு செய்துள்ளார் என்பது மிக நல்ல செய்தி தானே. இறைவன் இந்த உலகின் வழியாக, நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வின் வழியாக பல்சுவை விருந்துகளை, பலவகை விருந்துகளை இந்த ஆண்டு முழுவதும் ஏற்பாடு செய்கின்றார் என்ற உணர்வுடன் இத்தேடலை ஆரம்பிப்போம்.

இத்திருவசனத்தின் முதல் பகுதியை மட்டும் இன்றைய தேடலில் நாம் சிந்திக்க முனைவோம். "என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்" இந்த வரியை வாசிக்கும் போது மனதில் கொஞ்சம் நெருடல், கொஞ்சம் சங்கடம். திருப்பாடல் 23ல் ஏழு திருவசனங்கள் உள்ளன. இவ்வேழு திருவசனங்களில் 12 கூற்றுகள் சொல்லப்பட்டுள்ளன. ஆண்டவர் என் ஆயர், எனக்கேதும் குறையில்லை என்பது முதல் கூற்று; பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார் என்பது இரண்டாவது கூற்று. இப்படி அழகாக, இரம்யமாக ஆரம்பித்த திருப்பாடலில் இதுவரை ஒலித்து வந்த எண்ணங்களை அழகான இசையென நாம் உருவகித்தால், இன்று நம் தேடலுக்கு எடுத்துக் கொண்டுள்ள இந்த வரி அந்த இசையில் ஏற்பட்ட ஒரு அபஸ்வரமாய் ஒலிக்கிறது. இந்தத் திருப்பாடல் முழுவதையும் அழகியதோர் ஓவியமாய் நாம் கற்பனை செய்தால், இந்த வரி அந்த ஓவியத்தில் விழுந்த ஒரு கிறுக்கலாகத் தெரிகிறது.

இந்தியாவில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஓர் அடையாளம், ஓர் எண்ணம் - திருஷ்டி. எல்லாமே அழகாக, மிகப் பொருத்தமாக அமையும் போது, நடுவில் ஒரு குறையை நாம் வலியப் புகுத்தும் பழக்கம் இந்தியாவில் பலருக்கு உண்டு. குழந்தைகளுக்கு முகம் கழுவி, பவுடர் பூசி, மையிட்டு, பொட்டிட்டு, பட்டாடைகளை அவர்களுக்கு உடுத்தி விட்டு, இறுதியில் அவர்கள் முகத்தில் கறுப்பாக ஒரு சிறு புள்ளியை வைப்பார்கள். ஏன் என்று கேட்டால், பிறர் கண் படக்கூடாதென வைக்கப்பட்ட திருஷ்டிப் பொட்டு என்று சொல்வார்கள்.
கட்டிடங்கள் கட்டும்போதும், கட்டி முடித்து விழாக்கள் கொண்டாடும்போதும், கோரமான முகம் வரையப்பட்ட ஒரு பூசணிக்காயைத் தொங்க விடுவார்கள். கேட்டால், ஊரார் கண் அந்தக் கட்டிடத்தின் மேல் பட்டுவிடக்கூடாதென்று சொல்வார்கள்.
இதேபோல், ஊர்மெச்ச ஒருவர் புகழ்பெற்று, ஊர்வலமாய் வந்து இறங்கும் போது, அவருக்குத் திருஷ்டி சுத்திப் போடுவார்கள். இப்படி இந்திய கலாச்சாரத்தில் திருஷ்டி என்ற எண்ணம் ஆழமாய் வேரூன்றி உள்ளது. எல்லாமே மிகவும் நன்றாக அமைந்து விடும்போது, அந்த நிறைவை, சிறப்பைக் குறைக்கும் வண்ணம் நாமாகவே ஒரு குறையைப் புகுத்தி அதைத் திருஷ்டி என்கிறோம்.
இந்த எண்ணம் இந்தியாவுக்கு மட்டும் உரியது அல்ல. பிற நாடுகளிலும் பல வழிகளில் இந்த எண்ணம் வெளிப்படுகிறது. அற்புதக் கலைநயத்துடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கட்டிடங்களில் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறு பகுதியைச் சரியாக முடிக்காமல் விட்டு வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

திருப்பாடல் 23 அழகான எண்ணங்களை இதுவரை உருவாக்கி வந்துள்ளது. இப்படி ஒரு நிறைவை, அமைதியை, உறுதியைத் தந்த இந்தப் பாடலில் 5ம் திருவசனத்தில் வரும் இந்த வரி வித்தியாசமாக ஒரு திருஷ்டி போல தெரிகிறது. "இறைவா, நீர் எனக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்கின்றீர்" என்று மட்டும் திருப்பாடல் ஆசிரியர் கூறியிருந்தால், அந்த எண்ணம் இதுவரை ஒலித்த மற்ற எண்ணங்களை ஒத்ததாய் இருந்திருக்கும். ஆனால் ஆசிரியர் கூறுவதென்ன? "என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்" என்று கூறுகிறார்.

இந்த வரியில் எது நம் கவனத்தை அதிகம் ஈர்க்கவேண்டும் என்பதில் அடங்கியுள்ளது... இந்த வரியை நாம் புரிந்து கொள்ளும் அழகு. எது நம் கவனத்தை ஈர்க்க வேண்டும்? இறைவனா? அவர் ஏற்பாடு செய்யும் விருந்தா? அல்லது எதிரிகளா? இறைவன், அவர் ஏற்பாடு செய்யும் விருந்து இவைகளில் நமது கவனத்தை முதலில் செலுத்துவோம். எதிரிகளைப் பற்றிப் பின்னர் சிந்திக்கலாம்.

இந்த வரியில் நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது, இவ்வரியில் கூறப்பட்டுள்ள சூழ்நிலை. இத்திருப்பாடலின் முதல் வரியிலிருந்து இந்த வரிவரை கூறப்பட்டுள்ள ஏழு கூற்றுகளில் வெளிப்புறக் காட்சிகளை நம் மனதில் வரைந்து வந்தார் ஆசிரியர். பசும் புல்வெளி, அமைதியான நீர்நிலை, இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கு என்று நல்லவைகளும் பயம் தரும் சூழல்களும் வெளியிலேயே நடந்தன. இந்த எட்டாவது கூற்றிலிருந்து, இந்தப் பாடலின் இறுதி வரை இறைவனின் இல்லத்தில், ஆலயத்தில், அரண்மனையில் நடைபெறுவதைப் போல் காட்சிகள் அமைந்துள்ளன. வெளிப்புறத்தில் அலைந்து திரிந்து அவதியுற்ற நாம், இப்போது வீட்டுக்குள் வந்து விருந்துண்ண அமர்ந்திருக்கிறோம். வெளியிலிருந்த நாம், நான்கு சுவர்களுக்குள் ஒரு கூரைக்குக் கீழ் வந்ததுமே மனதில் பாதுகாப்பான உணர்வுகள் எழுகின்றன. இந்தப் பாதுகாப்பான சூழலில் விருந்து ஒன்று நடக்கிறது, தலையில் எண்ணெய் பூசப்படுகிறது, கிண்ணம் நிறைந்து வழிகிறது, இறைவனின் இல்லத்தில் நெடுநாள் வாழும் உரிமை கிடைக்கிறது. இவையனைத்தும் பாதுகாப்பை வலியுறுத்தும் அடையாளங்கள்.

திருப்பாடலின் இந்த வரியில் நாம் காணும் மற்றொரு வேறுபாடும் நம் கவனத்தை ஈர்க்கிறது. முதல் வரியிலிருந்து ஆயனின் கண்காணிப்பில் வழி நடந்த ஓர் ஆடாக தன்னை உருவகித்த ஆசிரியர், இந்த வரியிலிருந்து ஒரு மனிதப் பிறவியாக மாறுகிறார். இதுவரை ஆயனாய் வழி நடத்திய இறைவன், இந்த வரியிலிருந்து நண்பராய், விருந்து தரும் இல்லத்தலைவராய், எண்ணெய் பூசி, தன் இல்லத்தில் தங்கவைக்கும் தந்தையாய் மாறுகிறார்.
எந்த ஒரு கலாச்சாரத்திலும் விருந்து என்பது வெறும் உணவு மட்டுமல்ல. ஒவ்வொரு விருந்துக்கும் பின்புலத்தில் பாசம், பந்தம், உறவு, நட்பு, குலப்பெருமை என்று எத்தனையோ அம்சங்களை நாம் கொண்டாடுகிறோம். இறைவன் தரும் விருந்து என்பது இஸ்ரயேல் மக்களிடம் அடிக்கடி பேசப்பட்ட ஓர் அழகிய உவமை. நாடோடிகளாய், அடிமைகளாய் பயந்து பயந்து வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களிடையே பந்தி அமர்ந்து விருந்துண்பதென்பது வெறும் உணவு மட்டுமல்ல, தலை சிறந்த ஒரு கனவு. பாதுகாப்பை, குடும்ப உணர்வை, நல்ல விளைச்சலை, செல்வக் கொழிப்பைக் குறிக்கும் ஓரு கனவு.

இந்தப் பாதுகாப்பான விருந்து எதிரிகளின் கண் முன்னே நடைபெறுகிறது. இறைவன் ஏற்பாடு செய்துள்ள இவ்விருந்து நேரத்தில் திருப்பாடலின் ஆசிரியர் ஏன் எதிரிகளைப் பற்றி நினைக்கிறார்? இது இங்கு பொருந்தாத ஓர் எண்ணமாய்த் தெரிகிறதே என்று நினைக்கலாம். அதற்குக் காரணம் உண்டு. திருப்பாடல் 23ஐ தாவீது எழுதியிருக்கலாம் என்பது நாம் அறிந்த ஒரு விவரம். தன் வாழ்வின் இறுதியில் அவர் இந்தப் பாடலை எழுதிய நேரத்தில், அவர் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்வுகளும் அவர் மனக்கண் முன் விரிந்திருக்கும். 2 சாமுவேல் நூல் 17ம் பிரிவில் தாவீதின் வாழ்வில் நடந்த ஓர் இக்கட்டான, அதே நேரம் அழகிய சம்பவம் கூறப்பட்டுள்ளது. தன்னைக் கொல்வதற்குத் தேடிய தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பித்து ஓடிப்போனார் தாவீது. தன் மகனே தனக்கு எதிரியாக மாறிவிட்ட அந்த நேரத்திலும், தாவீதுக்கும் அவருக்கு விசுவாசமாய் இருந்த வீரர்களுக்கும் இறைவன் உணவளித்தார். அதுவும் சாதாரண, எளிய உணவல்ல. பல்சுவை விருந்து. இந்த விருந்தை தாவீதுக்கு அளித்தவர்கள் இஸ்ரயேல் இனத்தவர் அல்ல, பிற இனத்தவர். இப்பகுதிக்குச் செவி மடுப்போம்:

சாமுவேல் - இரண்டாம் நூல் 17: 27-29
தாவீது மகனயிம் வந்தடைந்த போது அம்மோனியரின் இராபாவிலிருந்து நாகாசின் மகன் சோபியும் லோதபாரிலிருந்து அம்மியேலின் மகன் மாக்கிரும், ரோகிலிமிலிருந்து கிலயாதியன் பர்சில்லாயும் தாவீதிடம் வந்து அவருக்கு படுக்கைகள், கிண்ணங்கள், மண்பாண்டங்கள், கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம், மொச்சை, அவரை, பயிறு, தேன், தயிர், ஆடுகள், பசும்பாற்கட்டிகள் ஆகியவற்றைக் கொடுத்தனர். பாலைவெளியில் மக்கள் பசித்தும் களைத்தும் தாகமாகவும் இருக்கிறார்க்ள என்று சொல்லி, தாவீதும் அவரோடு இருந்தவர்கள் உண்பதற்காக அவர்கள் இவற்றைத் தந்தனர். 
எதிரிகளின் கண் முன் விருந்து படைக்கும் இறைவனைப் பற்றி தாவீது கூறும்போது, இந்த நிகழ்வை அவர் மனதில் அசை போட்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல. இந்த வரியை அவர் எழுதுகையில், தன் முன்னோர்களுக்கும் இறைவன் ஆச்சரியமான வகைகளில் விருந்து கொடுத்ததை தாவீது நினைத்துப் பார்த்திருப்பார். தாவீதின் முன்னோர்களில் ஒருவரான சிம்சோன் இறைவனின் அருளால் அசாத்திய உடல் வலிமை பெற்றவர். அவர் தன்னைத் தாக்க வந்த சிங்கத்தைத் வெறும் கைகளால் கிழித்துக் கொன்றார். சில நாட்கள் சென்று அவ்வழியே அவர் செல்லும் போது, அச்சிங்கத்தின் எலும்புக் கூட்டில் உருவாகியிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் பருகினார். (நீதித் தலைவர்கள் 14: 8-9)

இறைவன் நினைத்தால் வானத்திலிருந்து மன்னாவைப் பொழிவார்; பாறையிலிருந்து நீர்ச்சுனையைத் திறப்பார்; சிங்கத்தின் எலும்புக் கூட்டில் தேன் ஊரச் செய்வார். இந்த அற்புதங்களையெல்லாம் கேள்விப்பட்டவர் தாவீது. எதிரிகள் தன்னைச் சூழ்ந்த நேரத்தில் பயந்து, பதுங்கி வாழ்ந்த தனக்கு விருந்து படைத்த இறைவனை வாழ்வில் உணர்ந்தவர் தாவீது. எனவே அவர் இந்த வரியை எழுதியிருப்பது பொருத்தம்தானே!

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அவர் நடந்த போது, சூழ்ந்த இருள் நீங்க வில்லை. ஆனால், இறைவனின் துணை தன்னுடன் இருந்தது என்று சொன்னார் திருப்பாடலின் ஆசிரியர். அதே போல், எதிரிகள் தன்னைச் சூழ்ந்த வேளையிலும் அந்த எதிரிகளை விரட்டி அடித்து விட்டு பின்னர் விருந்து படைக்காமல், அவ்வெதிரிகளின் கண் முன்னேயே விருந்து படைப்பதுதான் இறைவனின் அழகு என்று இந்த வரியில் சொல்லி பூரிப்படைகிறார் திருப்பாடலின் ஆசிரியர்.
"என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்"எதிரிகள் கண் முன்னே விருந்துண்பதில் உள்ள தனியழகைத் தொடர்ந்து அடுத்த வாரம் சிந்திப்போம்.







All the contents on this site are copyrighted ©.