2011-01-04 16:15:25

சனவரி 05, வாழந்தவர் வழியில்...


"இந்த மணி மண்டபம் துயரப் பெருமூச்சை உருவாக்குகின்றது.
இதைக் காணும் பகலவனும் நிலவும் கண்ணீர் வடிக்கின்றன."
தன் மனைவியின் நினைவாகத் தான் எழுப்பிய ஒரு நினைவுச் சின்னத்தைப் பற்றி ஷாஜஹான் எழுதிய கவிதையின் ஒரு பகுதி இது. அந்நினைவுச் சின்னம் இன்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால்.
இந்த அழகுக் கருவூலத்தை இந்தியாவில் நிறுவிய முகலாய மன்னர் ஷாஜஹான் 1592ம் ஆண்டு சனவரி 5ம் தேதி பிறந்தார். தன் மனைவி மும்தாஜின் பிரிவுத் துயரால் ஷாஜஹான் எழுப்பிய அந்த நினைவுச் சின்னம் இன்று உலகில் கலைக்கு, அன்புக்கு, காதலுக்கு ஓர் அதிசய சின்னமாய்த் திகழ்கிறது. தாஜ்மகால் அமைக்கப்பட்டதன் பின்னணியில் கூறப்படும் குறிப்புக்களும், கதைகளும் நம் மனங்களை நெருடுகின்றன. ஆதாரங்கள் அதிகம் இல்லாத இக்கதைகள் இந்த நினைவுச் சின்னத்தைக் கறைபடுத்தினாலும், தாஜ்மகாலைக் காண்பவர்கள் மனதில் இதன் அழகும் மென்மையும் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக பதிந்து வந்துள்ளன. இந்தியர்கள் என்ற முறையில் இந்த உலக அதிசயம் நம்மைத் தலை நிமிர்ந்து நிற்க வைக்கிறதென்பது உண்மைதானே!







All the contents on this site are copyrighted ©.