2011-01-04 14:37:41

ஐவரி கோஸ்ட் நாட்டு அரசியல் நெருக்கடி இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது-யூனிசெப்


சன.04,2011. ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக சுமார் 24 இலட்சம் பேர் பாதிக்கப்படக்கூடும் என்று மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள மனிதாபிமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் நாட்டுக்குள்ளே புலம் பெயர்வார்கள் என்றும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் லைபீரியா, கினி, மாலி, புர்க்கினா ஃபாசோ, கானா ஆகிய ஐந்து அண்டை நாடுகளுக்குச் செல்லக்கூடும் என்றும் அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பான யூனிசெப்பின் கூற்றுப்படி, அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ள இருபதாயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான மக்களுள் 75 விழுக்காட்டுக்கு அதிகமானோர் சிறாரும் பெண்களும் ஆவர்.

ஐவரி கோஸ்ட்டில் அண்மையில் நடைபெற்ற அரசுத்தலைவர்க்கானத் தேர்தலில் ஆட்சியிலிருந்த தலைவர் Laurent Gbagbo தோல்வியடைந்ததை முன்னிட்டு அவர் பதவியிலிருந்து விலக மறுத்து வருகிறார். இதனால் நாட்டில் கடும் அரசியல் பதட்டநிலைகள் உருவாகியுள்ளன. இத்தேர்தலில் வெற்றியடைந்த Alassane Ouattara என்பவரை நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவராகச் சர்வதேச சமுதாயம் ஏற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.