2011-01-03 15:17:30

சரியான வாழ்வு


சன.03,2011. அன்புள்ளங்களே, 2010ம் ஆண்டு முழுவதும் வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சிக்கு நீங்கள் தந்த ஆதரவில் கிடைத்தத் தெம்பில் இந்த 2011ம் ஆண்டிலும் இந்த அலசலைத் தொடரலாம் என்று நினைத்தோம். உலகின் பல பகுதிகளில் விழாக்காலம் முடிந்து விட்டாலும் தமிழர்களுக்குப் தைத்திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாக் காலம் காத்திருக்கின்றது. இந்த விழாக் காலங்களில் நண்பர்கள், உறவினர்கள், உடன் உழைப்பாளர்கள் என எல்லாரோடும் கை குலுக்கி கைகள் சற்று ஓய்ந்திருக்கின்றன. அதேசமயம் உடலுக்கும் மனதிற்கும் கூடுதல் மகிழ்ச்சியும் உற்சாகமும் கிடைத்திருக்கின்றன. இந்த ஆண்டு முழுவதும் இந்த மாதிரியான நல்லுணர்வுகள் உங்களுக்கு இருக்க வேண்டுமென்றே கடவுளிடம் நாங்கள் உங்களுக்காகக் பரிந்துரைக்கும் வேண்டுகோளாக இருக்கின்றது.

இந்நாட்களில் தமிழ் தினசரிகளைப் புரட்டினால் தேர்தல் பற்றிய செய்திகளையே அதிகம் காண முடிகின்றது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுவைக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் 50 ஆயிரம் துணை இராணுவ வீரர்களை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையிலும் வரும் மார்ச் மாதத்தின் மத்தியில் நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்பட 300 உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. எங்கு எந்தத் தேர்தல் நடந்தாலும் ஒரு சராசரிக் குடிமகன் இதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. காரணம், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எனது நிலைமையில் எந்தவித மாற்றமும் இருக்கப்போவதில்லை என்பது போன்ற ஓர் உணர்வு அவனுக்கு. இலங்கையில்கூட தொடர்ந்து துயரையே அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் ஆர்வம் இல்லை என்றே சொல்லப்படுகின்றது.

ஆயினும் இந்த சராசரி குடிமகன்கள் நல்ல காரியம் செய்வதிலும் முன்னேறி வருகின்றனர். இந்தியாவில் உடல்தானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மைசூரில் உடல்தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இஞ்ஞாயிறு செய்திகள் கூறுகின்றன. மேலும், இராணுவ உயர் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.ஏ,ஹஸ்னைன், இந்தப் புத்தாண்டின் குறிக்கோள் என, பொதுமக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான உறவை அதிகரிக்கும் நோக்கில் இந்திய இராணுவம் செயல்படும் என தெரிவித்திருக்கிறார். இன்னும், இப்புத்தாண்டையொட்டிப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பகைமை உணர்வுடன் நடந்து கொள்வதால் எதையும் சாதித்துவிட முடியாது. அது இரு நாடுகளுக்கு இடையேயானப் பிரச்சனைகளைத் தீவிரப்படுத்துவதோடு பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும். எனவே பாகிஸ்தானுக்கு இந்தியாவுடன் பகைமை உணர்வு தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டுக்கென வாழ்த்துச் செய்தி வழங்கிய தலைவர்களும், அமைதி, நல்லிணக்கம், வளர்ச்சி ஆகியவை செழித்தோங்க வேண்டும் என்றே வாழ்த்தியிருக்கின்றனர்.

திருத்தந்தை 16ம் பெனடிக்டும், மூவேளை செப உரையில், ஆயுதங்களாலோ பொருளாதார, அரசியல், கலாச்சாரச் சக்தியாலோ ஊடகத்துறையினாலோ அமைதியைக் கொண்டு வர முடியாது. மாறாக அன்பு மற்றும் உண்மைக்குத் திறந்த உள்ளம் கொண்ட மனச்சாட்சிகள் வழியாகவே அமைதியைக் கொண்டு வர முடியும் என்றார் RealAudioMP3 . இந்த டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் எகிப்து நாட்டு அலெக்சாந்திரியாவில் கிறிஸ்தவர்கள் நள்ளிரவு வழிபாடு முடித்து வெளியே வரும் போது காரில் குண்டு வெடித்ததில் 21 பேர் இறந்தனர். 71 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இது, கடவுளுக்கும் மனித சமுதாயத்துக்கும் எதிராகச் செய்யும் பாதகச் செயல் என்று சாடினார்.

மொத்தத்தில் எல்லாரும் விரும்புவது மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த வாழ்வையே. அந்த வாழ்வையே அனைவரும் தேடுகின்றனர், அதைப் பெறவே வாழ்த்துகின்றனர். இந்த மாதிரியான வாழ்வை அடைவது எப்படி?

David Starr Jordan என்பவர் சொன்னார் – “இவ்வுலகில் சரியான வாழ்விலிருந்து பிரிக்கப்படக்கூடிய எதுவுமே உண்மையிலேயே நேர்த்தியான வாழ்வாக இருக்க முடியாது” என்று. பல சமயங்களில் கண்களால் நம்ப முடியாத அளவுக்கு வெளியுலகில் சிகரத்தைத் தொட்டவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் சொதப்பலாக இருப்பதைக் காண முடிகின்றது. இவர்களின் ஆழ்மனதில் ஏதோ ஒரு தேடல் இருக்கின்றது. ஏதோ ஒன்றுக்கானப் உள்ளார்ந்த பசி அவர்களை வாட்டி வதைக்கிறது. குடும்பத்திலோ அல்லது பிற மக்களுடனோ சுமுகமான உறவு வைத்துக் கொள்வதில் தகராறு ஏற்படுகிறது. ஒரு சிலர் சொல்வார்கள். நான் என் தொழிலில் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளேன். ஆனால் எனது குடும்ப வாழ்வில் தோல்வியடைந்துள்ளேன். எனது மனைவி என் பிள்ளைகள் பற்றி அக்கறை இல்லாமல் இருந்தேன். அவர்கள் இப்பொழுது என்னைவிட்டு வெகு தூரம் சென்று விட்டார்கள். எனக்கு உண்மையிலேயே முக்கியமானது எது என்று தெரியாது குழம்புகிறேன்.

இன்னும் சிலர் சொல்வார்கள் – நான் எனது உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பேன் என்று இந்த ஆண்டில் ஆறாவது தடவையாகத் தீர்மானம் எடுத்தேன். ஏனெனில் எனது எடையைக் குறைக்க வேண்டுமென்று மருத்துவர் அடிக்கடி எச்சரித்து வருகிறார். உணவில் கட்டுப்பாட்டைத் தொடங்கிய ஒருசில வாரங்களிலே அதனை மீறி விடுவேன் என்று.

வேறு சிலர் சொல்வார்கள் – எனது நண்பர்களும் உறவினர்களும் வெற்றிகளை அள்ளி வரும்போது நான் அவர்களை ஆர்வமுடன் பாராட்டுவேன். ஆனால் என் மனதுக்குள்ளே எறிந்து கொண்டிருப்பேன். நான் ஏன் இப்படி இருக்கிறேன்? என்று.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார்- நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அந்தப் பிரச்சனைகளை நாம் உருவாக்கியபோது இருந்த மனநிலையோடு சிந்தித்தால் அவற்றைத் தீர்க்க முடியாது என்று. எனவே எந்த ஒரு பிரச்சனையையும் புதிய கோணத்தில், ஆழமான முறையில் சிந்திக்க வேண்டும். ஒருவர் தனது பிரச்சனைக்கு வெளியில் தீர்வு காண முயற்சிப்பதை விடுத்து முதலில் தன்னையே ஆராய வேண்டும். ஒருவர் தனது குணங்களை, தனது இலக்குகளை சிந்திக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவர் மகிழ்ச்சியான திருமண வாழ்வைக் கொண்டிருக்க விரும்பினால் அவர் அன்பான மனிதராக, நேர்மறை சக்தியை உற்பத்தி செய்பவராக இருக்க வேண்டும். எதிர்மறை சக்திகள் அவரை ஆட்கொள்ளாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒருவர் தன்னுடன் வேலை செய்பவர் பழகுவதற்கு இனிமையானவராக, ஒத்துழைப்புத் தரக்கூடியவராக இருக்க வேண்டும் என்று விரும்பினால் அவர் பிறரைப் புரிந்து கொள்ளக்கூடியவராக, தெளிவான சிந்தனையுள்ளவராக இருக்க வேண்டும். ஒருவர் அதிகமானச் சுதந்திரத்தைப் பெற விரும்பினால், அவர் பொறுப்புள்ளவராக, அதிகம் உதவி செய்பவராக, நல்ல உழைப்பாளியாக இருக்க வேண்டும். ஒருவர் தன்னைப் பிறர் நம்ப வேண்டும் என்று விரும்பினால், அவர் முதலில் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும். மொத்தத்தில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியே பொது வாழ்வில் வெற்றி பெற உதவும். ஒருவர் தனக்குத் தானே எடுக்கும் தீர்மானங்களில் உறுதியாய் இருந்தால்தான் பிறருக்கு கொடுக்கும் உறுதிகளிலும் நம்பத்தகுந்தவராய் இருக்க முடியும். ஒருவர் தன்னோடு இருக்கின்ற உறவை மேம்படுத்த முயற்சிக்காமல் பிறரோடு உறவுகளை மேம்படுத்த முயற்சித்தால் அது வீணாய்ப் போகும். அதில் பலன் இருக்காது. “தன் சுமையைத் தான் சுமந்து தன் வினையைத் தான் களைந்து…” என்ற பழம் பாடலும் இருக்கின்றது.

எனவே எதுவுமே சுயத்திலிருந்து தொடங்க வேண்டும். முதலில் ஒருவர் தன்னிடம் அனபாக நடந்து கொள்ள வேண்டும். அந்த அன்பே பிறரிடம் அன்பாகப் பழக வைக்கும். இம்மாதிரியான முயற்சியே ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தொடர்ந்து அனுபவிக்கச் செய்யும். இதைவிடுத்து இந்த மகிழ்ச்சியை சிலர் டாஸ்மார்க் கடைகளில் தேடுகிறார்கள். இந்தப் புத்தாண்டுத் தொடக்கத்தில் தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை எதிர்பார்த்த இலக்கைத் தாண்டி 16,445 கோடி ரூபாயை அள்ளியதாகச் செய்தி. பணத்தின் மீதான ஆசை எப்படியெல்லாம் செயல்பட வைக்கின்றதென்றால் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் 5 லட்சம் முதல் 75 இலட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறார்களாம். இந்தக் கொடுமை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதுவும் கேரள மாநிலத்தில் அதிகம் என்பது இத்திங்கள் தினச் செய்தி.

பிரபு ஒருவருக்கு ஞான தாகம் ஏற்பட்டது. தெளிவு பெற வேண்டி பல மதங்களையும் பல தத்துவங்களையும் விரிவாக அலசினார். ஆனால் ஜென் தத்துவம் மட்டும் எதிலும் சரிவர விளக்கப்படவில்லை. ஆதலால் ஒரு ஜென் குருவை நாடி, குருவே, எனக்கு ஜென் தத்துவத்தை விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றார். உடனே அவர், போய்ச் சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார். அந்தப் பிரபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்றுநேரம் கழித்துத் திரும்பி வந்த குரு புரிகிறதா என்பது போல் தலையசைத்துக் கேட்டார். வந்தவர் விழித்தார். குரு தொடர்ந்தார். அரசனோ அறிஞனோ அசடனோ யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியுமா அதைச் செய்துதானே ஆக வேண்டும். அதுவும் நானேதானே அதைச் செய்தாக வேண்டும். எனக்குப் பதிலாக உன்னை அனுப்ப முடியுமா என்று கேட்டார் குரு. வந்தவருக்கு ஞானம் பிறந்தது. அவரவர் வாழ்வு அவரவர் கையில். அதை எவரிடமும் தள்ளிவிட முடியாது. தனது வாழ்வைத் தானே வாழ்வதன் மூலமே அனுபவம் பெற முடியும். பிறர் அனுபவங்களைக் கொண்டு அதை உய்த்துணர முடியாது.

கவிஞர் கண்ணதாசன் கேட்டார் - எனக்காக நீ அழலாம். இயற்கையில் நடக்கும். ஆனால் எனக்காக நீ உணவுண்ண எப்படி முடியும் என்று. எனவே நாம் அனைவரும் விரும்பும் மகிழ்ச்சியை இப்புத்தாண்டில் அனுபவிக்க வேண்டுமானால், எந்த ஒரு நற்செயலையும் தன்னிலிருந்து தொடங்குவோம். அரிஸ்டாட்டில் சொன்னார் – நாம் திரும்பத் திரும்ப எதைச் செய்கிறோமோ அதுவாகவே இருக்கிறோம் என்று.








All the contents on this site are copyrighted ©.