2011-01-03 15:39:19

இந்தியாவின் விவசாயத்துறை கடுமையான ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது


ஜன 03, 2010. இந்தியாவின் விவசாயத்துறை கடுமையான ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று பிரபல வேளாண் விஞ்ஞானியும் விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிறு விவசாயிகள் தங்களது தொழிலை மேற்கொள்ள பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், நாட்டில் 50 விழுக்காட்டினர் தங்களது தொழிலைக் கைவிடும் நிலையில் உள்ளனர் என்றும் இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயக் குடும்பங்களிலிருந்து படித்து முன்னுக்கு வரும் இளைஞர்கள் மீண்டும் விவசாய செயற்பாடுகளுக்கு வருவதில்லை என்பதும், சிறு விவசாயிகளுக்கு தமது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததும், இந்தியாவிலிருக்கும் விவசாய நிலங்களில் 60 விழுக்காடு நிலங்களில் பயிர் செய்வதற்குப் போதிய நீர் வசதிகள் கிடைக்காததும் இந்தப் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன எனவும் டாக்டர் சுவாமிநாதன் கூறினார்.

விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமான ஊதியத்துக்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத வரையில் இப்பிரச்சினை தொடரவே செய்யும் எனவும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.