2011-01-02 10:17:54

வாழ்ந்தவர் வழியில் : புனித தமியான்


“அரசியல் மற்றும் பத்திரிகை உலகம், மொலோக்காய் குரு தமியான் போன்ற மிகச் சில ஹீரோக்களைப் பாராட்ட வேண்டும். இத்தகைய சாதனைத்தன்மைக்கான காரணங்களைத் தேடுவது தகுதி வாய்ந்தது”.

தொழுநோயாளரைப் பார்த்தவுடன் மகாத்மா காந்தி இவ்வாறு சொன்னதாக 1971ம் ஆண்டில் வெளியான Gandhi looks at leprosy என்ற தனது நூலில் M.S. Mehendale என்பவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் காந்திஜியின் சமூகப் புரட்சிகளுக்கு தமியான் தூண்டுகோலாய் இருந்திருக்கிறார். காந்திஜியின் இந்தச் சமூகப் புரட்சியே இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டது.

1873ம் ஆண்டில் ஹவாய்த் தீவின் மொலோக்காயில் 700 தொழுநோயாளர் மத்தியில் பணியாற்றச் சென்ற பெல்ஜிய நாட்டுத் துறவியே காந்திஜி குறிப்பிட்ட இந்தப் புனித குரு தமியான். இக்குரு 16 ஆண்டுகள் தொழுநோயாளர்களோடு தானும் ஒருவராக அவர்களோடு உணவருந்தி அவர்களின் உடல், ஆன்மீக மற்றும் உளவியல் தேவைகளை நிறைவேற்றி இறுதியில் தானும் அதே நோயால் தாக்கப்பட்டு தனது 49வது வயதில் இறந்தார். நான் நலமாக இருக்கிறேன், எனக்காக வருத்தப்பட வேண்டாம் என்று இவர் தம் பெற்றோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இவர் இம்மண்ணில் பிறந்தது 1840, ஜனவரி 3ல். தொழுநோயாளர்களின் திருத்தூதர் என்று போற்றப்படும் புனித தமியான் சமூகத்தில் ஒதுக்கப்பட்டோரில் மத்தியில் சேவையாற்ற எல்லாருக்கும் தூண்டுகோலாக இருக்கிறார்.

உலக நலவாழ்வு நிறுவனம், 2010ம் ஆண்டில் 141 நாடுகள் மற்றும் பகுதிகளிலிருந்து பெற்ற விபரங்களின்படி உலகில் 211,903 பேர் தொழுநோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள்.

புனித தமியான், இயேசு மரி திரு இதயங்கள் துறவு சபையைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் Jozef De Veuster. புனித தமியான். 1840ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பெல்ஜிய நாட்டு Tremelo வில் பிறந்தவர். 1889ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இறந்தார். 1995, ஜூன் 4ம் தேதி அருளாளர் எனத் திருத்தந்தை 2ம் ஜான் பவுலால் அறிவிக்கப்பட்டார். 2009, அக்டோபர் 11ம்தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்டால் புனிதர் என அறிவிக்கப்பட்டார். இவரது விழா மே 10. ஆனால் ஹவாய் நாட்டில் ஏப்ரல் 15 சிறப்பிக்கப்படுகின்றது.

எல்லா உயிர்களிடத்தும் வேறுபாடு பார்க்காமல் அன்பு செலுத்துவதே உண்மையான இறைத்தொண்டு







All the contents on this site are copyrighted ©.