2011-01-01 14:22:36

திருத்தந்தையின் புத்தாண்டு நாள் திருப்பலி மறையுரை.


ஜன 01, 2011. திருப்பலிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை மேற்கத்திய நாடுகளில் குறைந்து வருகிறது என அவ்வப்போது புள்ளிவிவரங்கள் தெரிவித்து வந்தாலும், திருத்தந்தையின் திருப்பலிகளில் கலந்துகொள்ள வரும் விசுவாசிகளின் எண்ணிக்கை குறைவதே இல்லை என்பது தான் நாம் நேரடியாக கண்டு வரும் உண்மை. உண்மையில் பார்த்தால், திருத்தந்தை தலைமையேற்று நடத்தும் வழிபாட்டுச் சடங்குகளில் பங்குபெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. இப்புத்தாண்டு தின திருப்பலியையொட்டியும் புனித பேதுரு பேராலயம் திருப்பயணிகளால் நிரம்பி வழிந்தது. அதில் பெரும்பான்மையினோர் மேற்கத்திய நாட்டவர்களே.

இத்திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய மறையுரைக்குச் செவிமடுப்போம்.

இயேசுவின் பிறப்பு மறையுண்மையை ஆழமாக தியானித்துவரும் இக்கிறிஸ்து பிறப்பு விழாக்காலத்தில் இறைவனின் தாயாம் அன்னைமரி விழாவை இன்று சிறப்பிக்கிறோம்.

புத்தாண்டைத் துவக்கும் இவ்வேளையில், மனித குலத்திற்கு நம்பிக்கையையும் அமைதியையும் உறுதி செய்யும் வல்லமையுடைய இறைவனை நோக்கி மன்றாடுவோம். ஆண்டில் முதல் நாளன்று திருச்சபையானது அமைதிக்கான தன் ஜெபக்குரலை எழுப்புகிறது. அமைதிக்கான பாதையில் நடைபோட துவங்குவதற்கு சிறப்பான நேரம் இது. போராலும், வரலாற்றின் வன்முறைகளாலும் துன்புறும் அனைத்து மக்களையும் இன்று நினைவு கூர்ந்து அவர்களுக்காகவும், அரசில் பொறுப்பிலுள்ளோருக்காகவும் அமைதிக்கான ஜெபத்தை மேற்கொள்வோம்.

காலம் நிறைவுற்றபோது பெண்ணிடம் பிறந்த இறைமகனுக்கும் அவரைப் பெற்றெடுத்த அன்னை மரிக்கும் நன்றி கூறுவோம். கிறிஸ்து வழியாயன்றி வருங்காலமில்லை, அவருக்கு வெளியே முழுமையுமில்லை.

அன்னை மரியை நாம் மகிமைப்படுத்தும்போது இயேசுவையும், இயேசுவை மகிமைப்படுத்தும்போது அவர் தாயாம் மரியையும் மகிமைப்படுத்துகின்றோம். இறைமகனை தன் வழி உலகுக்குத் தந்த அன்னை மரி இன்றும் தொடர்ந்து மனித குலத்தின் பரிந்துரையாளராகவும், தெய்வீக வாழ்வை உலகுக்கு வழங்குபவராகவும் உள்ளார். இதனாலேயே ஒவ்வொரு மனிதனும், திருச்சபையும் அவரை அன்னையாகக் கண்டு அவரை நோக்கி தங்கள் வேண்டுதலை எழுப்புகிறது.

இறைவனின் தாயாம் அன்னை மரியின் பெயராலும் மனித குலத்தின் பெயராலும் 1968ம் ஆண்டு சனவரி முதல் தேதியிலிருந்து இந்நாளை உலக அமைதி நாளாகச் சிறப்பிக்கின்றோம். அமைதி என்பது இறைவனின் கொடை. இயேசு நமக்கு வழங்கிய பிறரன்பின் முதற் கனி அமைதியாகும். அதுவே இறைவனுடன் ஆன நம் ஒப்புரவு. 44வது உலக அமைதி தினத்தைச் சிறப்பிக்கும் இவ்வேளையில், அமைதிக்கானப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்நாளுக்கானச் செய்தியை, "மத விடுதலையே அமைதிக்கானப் பாதை" என்ற தலைப்பில் வழங்கியிருந்தேன். ஆம். இவ்வுலகிற்கு இறைவனின் தேவை உள்ளது. நீதியும் அமைதியும் கூடிய ஒரு சமூக, சர்வதேச ஒழுங்கமைவை கட்டியெழுப்ப ஒழுக்க ரீதி, ஆன்மீக மற்றும் மத மதிப்பீடுகள் தங்கள் பங்கை வழங்குகின்றன.

வன்முறைகளும், சுயநலப்போக்குகளும், மக்களின் வருங்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் மோதல்களும், பதட்ட நிலைகளும், பாகுபாடுகளும், குறிப்பாக கிறிஸ்தவர்களைத்தாக்கும் மத சகிப்பற்றத்தன்மைகளும் தொடராதிருக்க அனைவரின் ஜெபங்களையும் வேண்டுகிறேன். அமைதியான உலகைக் கட்டியெழுப்பும் பாதையில் வார்த்தைகள் மட்டும் போதாது, மாறாக அமைதி உணர்வுடைய ஒவ்வொருவரும் ஜெபவேண்டுதலுடனும், அமைதி நோக்குடனும் வாழ வேண்டுகிறேன்.

அமைதியின் இளவலாம் இயேசுவை நமக்கு வழங்கிய அன்னை மரி, இப்புதிய ஆண்டில் இவ்வுலகம் ஏங்கும் அன்பெனும் கொடையைப் பெற்றுத்தர நம்மோடு இணைந்து நடைபோடுவாராக.

இவ்வாறு புத்தாண்டு தின திருப்பலியில் மறையுரை வழங்கினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.