2011-01-01 15:52:00

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
மகன் தந்தையிடம் புதிர் ஒன்றைக் கொடுத்தான். "ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேட்டான்.
"இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்." என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.
"அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.
அப்பா எதையோ புரிந்து கொண்டவர் போல், "ஓ, புரிகிறது... கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்றவைகளும் குளத்திற்குள் குதித்து விடும்." என்று சொன்னார். அவரது அறிவுத் திறனை அவரே மெச்சிக் கொண்டதைப் போல், புன்னகை பூத்தார்.
மகன் தலையில் அடித்துக் கொண்டு சலிப்புடன் விளக்கினான்: "அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள். மூன்று தவளைகளும் கரையில் தான் இருக்கும். அவைகளில் ஒன்று குளத்திற்குள் குதிக்கத் தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை." என்று விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.

ஆண்டின் முதல் ஞாயிறு இது. நேற்று ஆண்டின் முதல் நாளை, புத்தாண்டு நாளைக் கொண்டாடினோம். ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் கடைபிடிக்க வேண்டிய, செய்து முடிக்க வேண்டிய பல தீர்மானங்களை, திட்டங்களை மனதில் நினைக்கிறோம். தீர்மானங்கள், திட்டங்கள் மனதளவில் நின்று விட்டால் பயனில்லை. தீர்மானங்கள் செயல் வடிவம் பெற வேண்டும்.
நமக்கு இந்தப் பாடத்தைச் சொல்லித் தர இன்றைய ஞாயிறு திருவிழா பெரிதும் உதவியாக, உந்துதலாக உள்ளது. மூன்று இராசாக்கள், மூன்று அரசர்கள், மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் நமது இன்றைய விழா நாயகர்கள் நமக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகள். எந்தத் தடை வந்தாலும், எடுத்தத் தீர்மானத்தில் உறுதியாய் இருப்பதற்கு நமது வழிகாட்டிகள் இவர்கள்.

ஒரு சில வாரங்களுக்கு முன் கனவுகளின் காவலராக புனித யோசேப்பைக் கொண்டாடலாம் என்று குறிப்பிட்டோம். யோசேப்பு தான் கனவில் கண்டதை, கேட்டதை செயல்படுத்தியதால், அவருக்கு இந்தப் பெருமையை நாம் வழங்கினோம். அதேபோல், இந்த மூன்று ஞானிகளையும் தீர்மானங்களின் பாதுகாவலர்களாகக் கொண்டாடலாம். இந்தக் கோணத்தில் இருந்து நோக்கும்போது, புத்தாண்டின் துவக்கத்தில், தீர்மானங்களை நாம் சிந்தித்திருக்கும் இந்த நேரத்தில் மூன்று ஞானிகளைக் குறித்து நாம் சிந்தனை செய்வது பொருத்தமாக உள்ளது. கனவுகளைக் காண்பதும், தீர்மானங்களை எடுப்பதும் எளிது. அவைகளுக்குச் செயல் வடிவம் தருவதில்தான் நம் உறுதி தெரிய வரும்.

மூன்று ஞானிகளும் கண்டது கனவல்ல. ஒரு விண்மீன். வானில் தோன்றிய ஒரு விண்மீனை எளிதில் தங்கள் பார்வையிலிருந்தும், கவனத்திலிருந்தும் ஒதுக்கி வைத்து விட்டு, அவர்கள் தங்கள் வாழ்வைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அத்தீர்மானத்தைச் செயல்படுத்தினர்.
அவர்களது தீர்மானத்தைக் கேட்டதும் அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர் மக்கள் அவர்களைக் கேள்விக் குறியுடன் பார்த்திருக்கலாம். கேலி செய்திருக்கலாம். அவர்களது கேள்விகள், கேலிகள் இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. விண்மீனைத் தொடர்ந்தனர்.
இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த இந்த நிகழ்வைப் பல கோணங்களில் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் நடந்தனர் இந்த ஞானிகள் என்ற கோணத்தில் நம் சிந்தனைகளைத் தொடர்வோம். இறைவனைச் சந்தித்தபின் இந்த ஞானிகள் வேறு வழியாகச் சென்றனர் என்று நற்செய்தி சொல்கிறது. நம் வாழ்க்கையை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்று சிந்திக்கலாம். இறைவனைச் சந்திக்கும் போது, சந்தித்த பின் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்கலாம்.

விண்மீன்கள் என்றதும் மனதில் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்களும் பல எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. LKG யில் சொல்லித்தரப்பட்ட, இன்றும் சொல்லித் தரப்படும் Twinkle, twinkle little star என்ற குழந்தைப்பள்ளி பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. இந்த வரிகளில் ஆரம்பித்து, பின் வாழ்க்கையில் ஸ்டார்களைப் பற்றி நாம் பயின்ற பாடங்கள் பலவும் நினைவுக்கு வருகின்றன. தமிழ் நாட்டில், பல ஸ்டார்களை நாம் உருவாக்கிவிட்டதால், ஸ்டார்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. இந்த ஸ்டார்களைச் சுற்றி வட்டமிடும் விட்டில் பூச்சிகளை நினைத்து வேதனையாய் இருக்கிறது.

விண்மீன்களைக் கண்டு பயணம் மேற்கொண்ட இந்த ஞானிகளைப்பற்றி இன்றைய நற்செய்தி சொல்லும் மற்றுமொரு விவரம்: "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்." ஒரு சில விவிலிய ஆராய்ச்சியாளர்கள் இந்த ஞானிகள் இந்தியாவிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்வர். இவர்கள் கோள்களை, நட்சத்திரங்களை ஆராய்ந்து வந்தவர்கள்.
நம் தாயகத்தில் கோள்களை, நட்சத்திரங்களை வைத்து வாழ்வில் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப் பார்க்கலாம். ஒருவர் பிறந்த தேதியால், பிறந்த நேரத்தால் அவருக்குக் குறிக்கப்படும் நட்சத்திரம் அவரது வாழ்க்கையில் பல நேரங்களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் அறிவோம். இப்படி கோள்களையும், நட்சத்திரங்களையும் நம் வாழ்க்கையை நடத்திச் செல்ல விட்டுவிட்டு, பல நேரங்களில் நம்மையும், நம் குடும்பங்களையும் வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நாம் விலகிப் போகிறோமா என்பதைச் சிந்திக்கலாம்.

இந்த ஞானிகள் விண்மீன் தோன்றியதைக் கண்டனர். பயணத்தை மேற்கொண்டனர். விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்க வேண்டும். பயண வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும் தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனைப் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில் மேகமும், பனியும் விலகும் வரைக் காத்திருந்து மீண்டும் விண்மீனைப் பார்த்து எத்தனை எத்தனை இரவுகள் அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் இரவின் துணையில் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம். தாங்கள் எடுத்தத் தீர்மானத்திலிருந்து சிறிதும் தளராமல் சென்ற இவர்களைக் கட்டாயம் மெச்ச வேண்டும், பின்பற்ற முயல வேண்டும்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது அரிது. மிகவும் அரிது. நம்மில் பலர் வாழ்வது நகரங்களில். அங்கு இரவும் பகலும் எரியும் செயற்கை விளக்குகளின் ஒளியில் நாம் வானத்தையே மறந்து வாழ்கிறோம். வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? மேகங்கள் திரண்டு வரும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம்.
கருமேகம் சூழும்போது சந்தேகத்தோடு நிமிர்ந்து வானத்தைப் பார்க்கிறோம். அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும்போதும் மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்... கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள. சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண் சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் இறைவனிடம் நம்மை அழைத்துச் செல்ல அவைகள் தரும் அழைப்பும் தெரியாது.

நம் வாழ்க்கையில் உண்மை விண்மீன்கள் தொலைந்து போகும் போது, அந்த வெற்றிடத்தை நிரப்ப, மற்ற போலியான, செயற்கையான ஸ்டார்கள் மனதை ஆக்கிரமித்து விடுகின்றன. இன்று நாம் சிந்திக்கும் இந்த ஞானிகள் எத்தனை இரவுகள் விண்மீனைத் தொலைத்துவிட்டு வேதனைபட்டிருப்பார்கள்? இருந்தாலும் இறுதிவரை மனம் தளராமல் பயணத்தைத் தொடர்ந்தார்கள், இலக்கை அடைந்தார்கள். கடவுளைக் கண்டார்கள்.
வெகு தூரத்திலிருக்கும் விண்மீன்களை நோக்கிப் பயணங்களை ஆரம்பித்தால், அடுத்திருக்கும் அம்புலியிலாவது காலடி வைக்க முடியும். கிளம்பும்போதே, அடுத்த ஊர் போதுமடா சாமி என்று குறுகிய குறிக்கோளுடன் ஆரம்பித்தால், அடுத்த ஊரென்ன, அடுத்த வீட்டைக்கூட அடைய மாட்டோம். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற சொற்கள் நினைவிருக்கும் இல்லையா?
 உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப் போல் எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனஉறுதியைத் தந்து, இப்புத்தாண்டில் நம்மையும் தன் முகம் காண இறைவன் வழி நடத்த வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.