2011-01-01 15:51:46

சனவரி 02, வாழந்தவர் வழியில்...


இந்த இளம் பெண் இவ்வுலகில் வாழ்ந்தது 24 ஆண்டுகளே. அவைகளில் ஒன்பது ஆண்டுகள் உலகத்தின் கண்களில் படாமல் கார்மேல் துறவு மடத்தில் செபத்திலும் தவத்திலும் கழிந்தன. இப்படி மறைவு வாழ்வு வாழ்ந்த ஒரு பெண், அருளாளர் அன்னைத் தெரேசா, புனித மக்சிமில்லியன் கோல்பே, புனித பாத்ரே பியோ, திருத்தந்தை முதலாம் ஜான் பால் உட்பட பல ஆயிரம் உள்ளங்களில் தனியொரு இடம் பிடித்தவர். இந்த இளம் பெண்ணை உலகின் மறைபரப்புப்பணி நாடுகள் அனைத்திற்கும் பாதுகாவலராக திருச்சபை அறிவித்துள்ளது.

பல்லாயிரம் மக்களுக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த புனித பிரான்சிஸ் சேவியரும், இப்பெண்ணும் மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலர்கள். ஒன்பது ஆண்டுகள் (1543-1552) மறைபரப்புப்பணி நாடுகளில் ஊர் ஊராகச் சென்று மறையுரைகள் ஆற்றி, அதன் வழியாக பல்லாயிரம் மக்களை இறைவன் பக்கம் அழைத்து வந்தவர் புனித பிரான்சிஸ் சேவியர். ஒன்பது ஆண்டுகளாக (1888-1897) நான்கு சுவர்களைத் தாண்டி வெளியே வராமல், தன் செபத்தாலும் தவத்தாலும் பல்லாயிரம் மக்களை இறைவன் பக்கம் அழைத்து வந்தவர் இந்த இளம் பெண். எனவேதான் இருவரும் இந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

1873ம் ஆண்டு சனவரி 2ம் தேதி பிறந்த Lisieux நகர் தெரேசா, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தன் 24ம் வயதில் இறையடி சேர்ந்தார். இருபதாம் நூற்றாண்டின் மிகப் புகழ்பெற்ற புனிதர்களில் இவர் ஒருவர். குழந்தை இயேசுவின் தெரேசா என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
 இறைவனிடம் மக்களைக் கொண்டு வந்து சேர்க்கும் பணியை மறையுரைகளால் ஆற்றலாம். மௌனத்தாலும் ஆற்றலாம் என்பதைத் தன் வாழ்வால் நிரூபித்தவர் குழந்தை இயேசுவின் புனித தெரேசா.







All the contents on this site are copyrighted ©.