2011-01-01 14:22:57

Te Deum நன்றி வழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை.


ஜன 01, 2011. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கென உலகம் தன்னைத் தாயாரித்துவரும் வேளையில், ஆண்டின் இறுதி நாளான வெள்ளியன்று மாலை உரோம் நேரம் ஆறு மணிக்கு அதாவது இந்திய நேரம் இரவு 10.30 மணிக்கு 2010ம் ஆண்டின் கொடைகளுக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் திருவழிபாட்டுச் சடங்கை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றி மறையுரை ஒன்றும் வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

2010ம் ஆண்டில் இறைவன் நமக்கு வழங்கிய கொடைகளுக்கு நன்றி கூற புனித பேதுரு பசிலிக்காவில் கூடியுள்ளோம். மனித உருவில் நமக்கென வந்த இறைமகன் எனும் கொடைக்காகவும் நன்றி கூறுவோம்.

என்றென்றும் நிலைத்திருக்கும் இறைவன் வரலாற்றில் புகுந்து, அதன் மூலத்தை புதுப்பித்து, மனிதனை பாவத்திலிருந்து விடுவித்தார். காலம் நிறைவுற்றபோது, இறைவன் தன் மகனை அனுப்பினார். நிறைவேறியுள்ள ஒரு காலத்தில் நாம் உள்ளோம். துன்பத்தாலும், தீமைகளாலும், இயற்கைபேரிடராலும் மனிதகுலம் துயருற்றாலும் கிறிஸ்துவின் விடுதலையும் மகிழ்வும் நிலையானதாக உள்ளது.

2010 நிறைவுற உள்ள இந்நேரத்தில், முதலில் இறைவன் நம்மீது வைத்துள்ள அன்பிற்காக நன்றி கூறுவோம். இங்கு குழுமியிருக்கும் திருச்சபை மற்றும் அரசு அதிகாரிகளுக்கும், அனைத்து விசுவாசிகளுக்கும் அன்புடனும் ஜெப உறுதிப்பாட்டுடனும் கூடிய நன்றியைத் தெரிவிக்கிறேன்.

நற்செய்தி அறிவிப்பைப் புதுப்பிக்கவேண்டிய தேவை அனைத்து இடத்திற்கும் தேவைப்படுகிறது. ஏன்? உரோம் நகருக்கும் கூடத்தான். புனித பவுலும் கூறுகிறார், 'அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால்தான் அதைக்கேட்க வாய்ப்புண்டு'(உரோமை 10,17)என்று. அனைவருக்குமென இறைமகன் மனுவுரு எடுத்த மறையுண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்குமானது. அனைத்துப் பங்குதளங்களுக்கும், குருக்களுக்கும், திருவழிபாட்டுக் குழுக்களுக்கும், வேதியர்களுக்கும், பிறரன்பின் சாட்சிய குழுக்களுக்கும் என் ஊக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். இவர்களின் சாட்சியம் நற்செய்தி அறிவிப்போடு பிணைந்துள்ளது. இந்த 2010ம் ஆண்டில், உரோம் மத்திய இரயில் நிலையம் அருகே இருக்கும் பிறரன்பு இல்லத்திற்கு நான் சென்றதை நினைவுகூர்கிறேன். துன்புறும் மக்களின் நிலைகளை மனதிற்கொண்டு, இதையொத்த பிற பணிகளை உரோம் மறைமாவட்டம் ஊக்குவிக்க வேண்டுகிறேன்.

வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குமாறு உங்களை அழைக்கிறேன். கிறிஸ்துவே நம் நம்பிக்கை. ஏனெனில் அவரே நமக்கு மீட்பாகவும் அமைதியாகவும் வந்தார்.

இவ்வாறு 2010ம் ஆண்டிற்கான நன்றியறிவிப்பு வழிபாட்டில் மறையுரை வழங்கினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.