2010-12-31 14:06:26

ஜனவரி 01. வாழ்ந்தவர் வழியில்.....


எவ்வளவோ காலம் நம்மைக் கடந்து போயிருக்கு.. எவ்வளவோ காலத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம்.. “எல்லாம் நல்லதுக்கே”என்று எத்தனையோ தடவைகள் அமைதியாகச் சென்றுள்ளோம்... எத்தனையோ பெரியவர்களைப் பார்த்து பாடம் கற்றிருக்கிறோம்.

புதிய கோணத்தில் சிந்தித்து முயற்சிகளை துரிதப்படுத்த புதிய சக்தி நமக்கு புத்தாண்டில் பிறக்கும் என்பது நம் நம்பிக்கை.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில், தினமும் ஒரு நல்லவரின் வாழ்வுப் பாதையில் நம்மை வழிநடத்திச் செல்ல உதவும் நோக்குடன் வருகிறது வத்திக்கான் வானொலியின் "வாழ்ந்தவர் வழியில்" எனும் புது நிகழ்ச்சி.

நம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு, பன்முகத் திறன் உள்ளவர்களாய் இருக்கவும், மேலும் மேலும் புதுத் திறமைகளை வளர்த்துக் கொண்டு நம்மை மெருகேற்றிக் கொள்ளவும் இவ்வாண்டின் இப்புது நிகழ்ச்சி உதவட்டும்.

நேற்று என்பது நினைவிலும் நாளை என்பது கனவிலும்

இன்று என்பது நிகழ்விலும் இப்போது என்பதே வாழ்விலும் மனதிலும் உறுதியாக நிலவும் இவ்வேளையில், நல்லவர்களின் வாழ்விலிருந்து நமக்கான பாடங்களை எடுத்துக்கொள்வோம்.

இந்த ஆண்டு தமிழகத்திற்கு தேர்தலின் ஆண்டு. ஒரு சிறு சபதம் எடுப்போம்.

தேர்தலில் கண்டிப்பாக வாக்களித்து நம் ஜனநாயக கடமையை

ஆற்றுவோம். ஓட்டுக்குக் காசு வாங்குவதைத் தவிர்ப்போம்.

எந்த ஒரு மனிதனும் மற்றவர்கள் இது போல் இருக்க

வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் யாரும் தன்னை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை.

இங்கு தான் இயேசு கூறுகிறார், " பிறர் உங்களுக்கு என்னச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதையே பிறருக்கும் செய்யுங்கள்"

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வரும் வாழ்ந்தவர் வழியில்... நமக்குப் புதிய எண்ணங்களை, பாடங்களைச் சொல்லித் தரும் என்பது எங்கள் நம்பிக்கை.








All the contents on this site are copyrighted ©.