2010-12-30 14:47:13

வத்திக்கான் நாட்டின் நிதித்துறையில் மேற்கொள்ளபபடவிருக்கும் விதிகளை வெளியிட்டுள்ளார் பாப்பிறை


டிச.30, 2010. வத்திக்கான் நாட்டிற்குள் நிதித்துறையில் சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெறா வண்ணம் தடுக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றிய அவையுடன் இணைந்து உருவாக்கிய நான்கு சட்டங்கள் அமலுக்கு வருவதாக திருப்பீடம் அறிவித்துள்ளது.

"Motu Proprio" என்ற அப்போஸ்தலிக்க மடல் மூலம் இதற்கான ஒப்புதல் வழங்கி, அதன் விதிகளையும் விவரங்களையும் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

வன்முறை நடவடிக்கைகளுக்கான நிதியுதவி, குற்ற நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பணம் போன்றவை குறித்து தீவிரமாகக் கண்காணித்தல், சந்தேகத்திற்குரிய பண பரிமாற்றங்களைத் தெரிவித்தல் இவை குறித்த ஐரோப்பியச் சட்டங்களைத் தீவிரமாகக் கடைபிடித்தல், கள்ள நோட்டு விவகாரங்களில் தீவிர தண்டனை முறைகளைப் புகுத்தல், ஐரோப்பிய மற்றும் அனைத்து நாட்டு ஒத்துழைப்பை வழங்குதல் போன்றவைகளுக்கு 4 புதிய சட்டங்களைப் புகுத்துவதன் மூலம் திருப்பீடம் உறுதி வழங்கியுள்ளது.

நிதி முறைகேடுகளைக் கண்காணிக்க இதற்கான தனி அதிகாரமுடைய ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் திருப்பீடம் தெரிவிக்கிறது. இவ்வமைப்பிற்கான தலைவரும், உறுப்பினர்களும் திருத்தந்தையால் நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டங்களும், இவ்வமைப்பின் கண்காணிப்புப் பணியும் வரும் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.








All the contents on this site are copyrighted ©.