2010-12-28 15:36:28

பிலிப்பைன்சில் குண்டு வைத்துத் தாக்கப்பட்ட கத்தோலிக்க ஆலயம் பழுதுபார்க்கப்படுமாறு ஆயர் வேண்டுகோள்


டிச.28,2010. பிலிப்பைன்சின் சுலு மாநிலத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று கிறிஸ்மஸ் தினத்தன்று குண்டு வைத்துத் தாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டதற்குப் பரிகாரம் செய்யப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் புனிதமானவை என்பதால் அவை மதிக்கப்பட வேண்டுமென்றும் தாக்கப்பட்ட அவ்வாலயம் பழுதுபார்க்கப்படுமாறும் கோட்டாபாட்டோ துணை ஆயர் Jose Colin Bagaforo கேட்டுக் கொண்டார்.

மின்டனாவோ கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் முந்தைய காலத்தைவிட தற்சமயம் அமைதிக்காக அதிகமாக உழைக்குமாறும் விசுவாசிகள் அமைதிக்காகச் செபிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

அதேசமயம், பிலிப்பைன்ஸ் மக்கள் வருகிற புத்தாண்டில் அமைதி மற்றும் நம்பிக்கை வாழ்க்கையில் சோர்வடையாமல் வாழுமாறு வலியுறுத்தினார் அந்நாட்டின் காகயான் தெ ஓரோ பேராயர் அந்தோணியோ லெடெஸ்மா.

இக்கிறிஸ்மஸ் தினத்தன்று இடம் பெற்ற இத்தாக்குதல் குறித்து பல்வேறு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் குழுக்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. இத்தாக்குதலில் ஓர் அருட்பணியாளர் உட்பட பத்துப் பேர் காயமடைந்தனர்.







All the contents on this site are copyrighted ©.