2010-12-25 13:57:19

கிறிஸ்துமஸ் இரவுத்திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


டிச.25, 2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்துமஸ் இரவுத்திருப்பலியை 24ம் தேதி இரவு உரோம் நேரம் 10 மணிக்கு அதாவது இந்திய நேரம் டிசம்பர் 25 அதிகாலை 2.30 மணிக்குத் துவக்கினார். புனித இராயப்பர் பேராலயம் திருப்பயணிகளால் நிரம்பி வழிய, இயேசுவின் பிறப்பில் புதைந்து கிடக்கும் மறையுண்மைகள் குறித்து மறையுரை வழங்கினார் பாப்பிறை.

"நீர் என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்." என்ற திருப்பாடல் இரண்டின் வார்த்தைகளுடன் திருத்தந்தையின் மறையுரை துவங்கியது. இந்தத் திருப்பாடலின் வார்த்தைகள் இஸ்ரயேல் மன்னர்களின் முடிசூட்டு விழா வைபவத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள். மன்னர் பதவியேற்கும்போது, அவர் கடவுளின் மகனாக மாறுகிறார். இது கடவுளால், அப்பொறுப்பிற்கென மன்னரை மகனாக தத்தெடுப்பதை ஒத்தது. ஆகவே மன்னரின் முடிசூட்டல் என்பது இரண்டாவது பிறப்பை ஒத்தது. அவரின் தோள்களிலேயே வருங்காலம் உள்ளது. அவரே அமைதிக்கான வாக்குறுதியைக் கொண்டிருப்பார். இந்தத் திருப்பாடல் வார்த்தைகளும், எசாயாவின் ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும் (எசாயா 9: 6) என்ற வார்த்தைகளும், பெத்லகேமின் அந்த இரவில் உண்மையானது. அந்தக் குழந்தை கடவுளால் பிறந்தது. இறைவனின் முடிவற்ற வார்த்தையே மனித குலத்தையும் இறைமையையும் இணைத்தது. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான முடிவற்ற இடைவெளி வெற்றிகொள்ளப்பட்டது. இறைவனே இறங்கி வந்தார், நம்மை அவரிடம் அழைத்துக்கொள்ள. ஆகவே இவ்விரவானது, இறைவனின் அருகாமையைக் குறித்த மகிழ்வாகும். கடவுளே குழந்தையாக இறங்கி வந்து நம் இதயங்களில் அமைதியை விதைத்து, நம் அன்புக்காக இறைஞ்சுவதுபோல் காணப்படுவது குறித்து அவருக்கு நன்றி கூறுவோம்.
"மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்."(லூக்கா 2: 7) என புனித லூக்கா நற்செய்தி விவரிக்கின்றது. தலைப்பேறான மகன் என்பது, பல குழந்தைகளுள் மூத்தவர் என்பதை குறிப்பிடவில்லை. தலைப்பேறு என்பது ஒரு கௌரவம். விடுதலைப்பயண நூலில் கடவுள், இஸ்ரயேல் 'நம் மூத்தப் புதல்வன்' என அழைப்பதைக் காண்கிறோம். பழைய ஏற்பாட்டின் வாக்குறுதிகள் இயேசுவில் ஒன்றிணைந்தன, நிறைவேறின. தலைப்பேறு என்பது சிறப்பான விதத்தில் இறைவனுக்குச் சொந்தமானது, அது பலிக்கென்ற நோக்கம் கொண்டது. இது, சிலுவைப்பலியில் தனிப்பட்ட முறையில் நிறைவேற்றப்பட்டது. அன்னை மரியா தன் தலைப்பேறான மகனைத் துணிகளில் சுற்றி முன்னிட்டியில் கிடத்தியபோதே, இறைவன் உருவாக்கிய புதிய, உண்மையான சகோதரத்துவம் துவங்கி விட்டது.
உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! (லூக்கா 2: 14) என விண்ணகத் தூதர்கள் கிறிஸ்து பிறப்பின்போது பாடியதை அறிவோம்.
நம்மை அன்பு செய்யும் இறைவன், தன் மகனின் பிறப்பு வழியாக, நம் பதிலுக்காகக் காத்திருக்கிறார். எப்போதும் இறைவன், நாம் எதிர்பாராத வழிகளில் நம்மை முந்திக் கொள்கிறார். நம்மைத் தேடுவதை அவர் ஒருநாளும் விடுவதில்லை. அவர் அன்பில் நாம் அவரோடு இணைவதற்காக அவர் காத்திருக்கிறார். நாம் அன்புகூரும் மக்களாக மாறி, உலகில் அமைதியைக் கொணர வேண்டுமென்பதற்காக அவர் நம்மை அன்பு செய்கிறார்.
 இவ்வாறு தன் மறையுரையை வழங்கினார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.