2010-12-24 15:31:15

டிசம்பர் 25. நாளும் ஒரு நல்லெண்ணம்.


இஞ்ஞாயிறு திருக்குடும்பத் திருவிழாவைச் சிறப்பிக்கிறோம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். குடும்பம் என்பது ஓர் இனிய கவிதை. ஒரு மனிதனின் செய்கைகளை வைத்து அவன் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவனா இல்லையா என்று கணிக்கிறோம். இந்தியாவில் நாம் காணும் குடும்பப்பிணைப்பும் குடும்பத்தில் பொழியப்படும் பாசமும் ஏனைய நாடுகளைவிட உயர்ந்ததாக இருகின்றது. நம் நாட்டில்தான் கூட்டுக்குடும்ப முறையும் அதிக அளவில் உள்ளது. பெரியோர்கள் குழந்தைகளுக்காக பெரிய பெரிய தியாகங்கள் மேற்கொள்வதும் இந்நாட்டில்தான். குழந்தைகளைப் பெற்று, சீராட்டி, வளர்த்து, பெரியவர்களாக உருவாக்கும் வரை பெற்றோர்கள் படும் பாடு அனந்தம். இங்கு தியாகங்கள் தான் நிரம்பியிருக்கின்றன. நகர வாழ்க்கையில் இத்தகைய தியாகங்களுக்கு விலை பேசப்பட்டு வருகின்றபோதிலும் கிராமங்களில் இன்றும் இலட்சக்கணக்கில் தியாகத்தெய்வங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். குழந்தைகளைக் கண்ணின்மணிபோல் காப்பாற்றி வளர்க்க பெற்றோர்கள் தங்கள் மீதே கடமையுணர்வை, பொறுப்புணர்வை புகுத்தியுள்ளார்கள். பல அறிஞர்களின் புத்தகங்களை நாம் படித்திருக்கலாம். பெரும்பான்மையானவற்றுள், திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே, என் தாய்க்கு இப்புத்தகம் காணிக்கை, என்னைச் சீராட்டி வளர்த்த என் பெற்றோருக்குக் காணிக்கை என எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். தனக்கு நிழல் தர தான் வெயிலில் வாடிய அந்த உன்னத மரத்தை இந்த இளந்தளிர் மறக்கவில்லை என்பதைத்தானே இது உணர்த்துகிறது. பல குடும்பங்களில் கணவனும் குழந்தைகளும் உண்டபின் சட்டியில் எதுவும் மிஞ்சியிருக்காது. அன்று அந்த அன்னை வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டு படுக்கச் செல்வாள். பல ஆடவர்கள் வெளியில் கடன் வாங்கி, அவமானத்தைத் தாங்கிக் கொண்டு, குழந்தைகளின் படிப்பில் மகிழ்ச்சியைக் காண்பர். மூத்தவளாகப் பிறந்த பெண், தன் சகங்களை விட்டுக்கொடுத்து மற்றவர்களைக் கரையேற்ற ஓடாக தேய்வதில்லையா? இதெல்லாம் ஒரு தொடர்கதை. யாரும் இச்சுமையை இவர்கள் மேல் திணிக்கவில்லை. எல்லாவற்றையும் உதறிவிட்டு தன் சுகமே பெரிதென எண்ணி ஓடிவிட இவர்களால் முடியும். ஆனால் இதெல்லாம் இவர்களே விரும்பி ஏற்றுக் கொண்ட சுமைகள். அதுதான் நம் பாரத மண்ணின் மிக உயரிய பெருமை. இத்தகையத் தியாகத்தூண்கள் இருக்கும் வரை நம் குடும்பங்கள் நிச்சயம் சிறப்பு பெறும். உன்னதத் தலை முறைகள் மீண்டும் மீண்டும் உருவெடுக்கும்.








All the contents on this site are copyrighted ©.