2010-12-23 15:37:16

ஈராக்கில் கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலி நடக்காது


டிச.23, 2010. ஈராக்கில் கடந்த இரு மாதங்களாகக் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து வரும் வன்முறைகளின் எதிரொலியாக, அங்கு கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலி அனைத்து கோவில்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பு கருதி பாக்தாத், மோசுல், கிர்குக் ஆகிய நகரங்களில் கிறிஸ்மஸ் இரவுத் திருப்பலி நடைபெறாது என்று கிர்குக் உயர் மறைமாவட்ட கல்தீய ரீதிப் பேராயர் லூயிஸ் சாகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

பாதுகாப்பு கருதி, கோவில்களின் வெளிப்புறங்களில் அதிக அலங்காரங்கள் மேற்கொள்ளப்படாதென்றும், கிறிஸ்மஸ் காலைத் திருப்பலியும் எளிய முறையில் கொண்டாடப்படுமென்றும் பேராயர் சாகோ கூறினார்.

ஈராக் அரசும், அரசியல் வாதிகளும் இப்பிரச்சனையில் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளாதபோது, தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று கூறிய பேராயர் லூயிஸ் சாகோ, இதுபோன்ற இக்கட்டான சூழலிலும் கிறிஸ்மஸ் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு விழா என்பதை ஈராக் கிறிஸ்தவர்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றும் உறுதி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.