2010-12-23 15:34:31

BBCல் ஒலிக்கவிருக்கும் திருத்தந்தையின் உரை


டிச.23, 2010. BBC நிறுவனத்தின் Thought for the Day அதாவது, நாளுமொரு எண்ணம் என்ற நிகழ்ச்சிக்கென திருத்தந்தையின் உரை ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வுரை BBCன் Radio 4 என்ற வானொலி மூலம் கிறிஸ்மஸுக்கு முந்திய நாள் இவ்வெள்ளியன்று ஒலிபரப்பு செய்யப்படும்.

இந்த ஒலிபபதிவானது இப்புதன் பொது மறைபோதகத்திற்குப் பின் பதிவு செய்யப்பட்டதென்று வத்திகான் செய்திகள் கூறுகின்றன.

நாளுமொரு எண்ணம் என்பது மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பிரித்தானிய மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் திருத்தந்தை பேசவேண்டும் என்று BBC நிறுவனம் கடந்த சில மாதங்களாக வத்திக்கானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்ததாகவும், இப்பேச்சு வார்த்தைகளின் முடிவாக, திருத்தந்தையால் இச்செய்தி வழங்கப்பட்டுள்ளதென்றும் BBC நிறுவனத்தின் சார்பில் பேசிய டேவிட் வில்லி (David Willey) கூறினார்.

பிரிட்டன் மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பை எடுத்துரைக்கும் திருத்தந்தை, கிறிஸ்மஸ் விழா கேளிக்கைகளிலிருந்து சிறிது தள்ளி நின்று, இவ்விழாவின் உண்மைப் பொருளை உணர இச்செய்தியின் வழியாக அம்மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

1970ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7.45 மணிக்கு ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மதத் தலைவர்கள் 3 நிமிட உரைகள் நிகழ்த்தி வந்துள்ளனர்.

கிறிஸ்தவ நாள்காட்டியில் மிக முக்கியமான இந்த விழாவன்று திருத்தந்தை இந்த உரை வழங்குவது மிகப் பொருத்தம் என்று BBCன் Radio 4 வானொலியின் இயக்குனர் Gwyneth Williams கூறினார்.







All the contents on this site are copyrighted ©.