2010-12-21 15:32:05

டிசம்பர் 22, நாளுமொரு நல்லெண்ணம்


வருகிற சனிக்கிழமை கிறிஸ்து பிறப்புத் திருவிழா. இறுதிநேர தயாரிப்பில் ஈடுபட்டிருப்போம். இத்திருவிழாவின் தயாரிப்பில் உள்ள ஓர் உண்மையை Louise Teisberg என்பவர் ஒரு சிறு கதையாக, கவிதையாகச் சொல்லியிருக்கிறார்:
கிறிஸ்மஸ் வாரம் அது. தலைக்கு மேல் வேலைகள் குவிந்திருந்தன.
அந்த நேரம் பார்த்து, இயேசு என் வீட்டுக்கு வந்தார்.
அலங்காரங்கள் ஆரம்பித்திருந்ததால், வீடு அலங்கோலமாய் இருந்தது.
அனுப்ப வேண்டிய இறுதி நேர வாழ்த்துக்கள் முகவரி எழுதப்படாமல் கிடந்தன.
இவை அனைத்தையும் இயேசு கவனித்தார்.
கிறிஸ்மஸ் மரத்துக்குக் கீழ், பரிசுப் பொருட்கள் குவிந்திருந்தன.
பெயர்கள் குறிக்கப்படுவதற்குக் காத்திருந்தன.
பரிசுப் பொருட்களைக் கண்ட இயேசு, "என்னுடைய பிறந்த நாளைத்தானே கொண்டாடப் போகிறாய்? என்னுடைய பரிசு எங்கே?" என்று கேட்டார்.
அவர் விளையாட்டாகக் கேட்கிறார் என்று நினைத்து, சிரித்து மழுப்பினேன்.
அவர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் தன் பரிசு எங்கே? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
இறுதியில் உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று.
"உங்கள் பெயர் என் பரிசுப் பட்டியலில் இல்லை." என்று மெதுவாகச் சொன்னேன்.
 கிறிஸ்துவை மறந்துவிட்டு, அல்லது மறைத்துவிட்டு கிறிஸ்மஸ் கொண்டாட முடியும் என்று உலகம் பல வழிகளைச் சொல்லித் தருகிறது. நாமும் இந்தக் கூட்டத்தில் கலந்து, கரைந்துவிட முடியும். எச்சரிக்கை.







All the contents on this site are copyrighted ©.