2010-12-21 15:39:14

குடியேற்றதாரத் தொழிலாளர் குறித்த தெளிவான சட்டங்கள் இல்லை, இலங்கை ஆயர் வருத்தம்


டிச.21,2010. குடியேற்றதாரத் தொழிலாளர் விவகாரம் மிகவும் கவலை தருவதாய் இருக்கும் அதேவேளை இத்தொழிலாளர் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் களையப்பட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு இலங்கையின் திரிகோணமலை-மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை வலியுறுத்தினார்.

சர்வதேச குடியேற்றதாரர் தினமான டிசம்பர் 17ம் தேதி கொழும்புவில் இலங்கை காரித்தாஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய ஆயர் கிங்ஸ்லி, குடியேற்றதாரத் தொழிலாளர் குறித்த தெளிவான மற்றும் திட்டவட்டமான சட்டங்கள் இல்லை என்ற வருத்தத்தையும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இலங்கைக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் ஜோசப் ஸ்பித்தேரி, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கை தேசிய காரித்தாஸ் இயக்குனர் அருள்திரு ஜார்ஜ் சிகாமணி, பல குருக்கள், அருட்சகோதரிகள், அரசு சாரா நிறுவனப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் பீரிஸ், குடியேற்றதாரத் தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கத்தோலிக்கத் திருச்சபை முன்னின்று செயல்படுகிறது என்ற பாராட்டையும் தெரிவித்தார்.

ஆண்டு தோறும் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கை மக்கள் வேலை தேடி வெளி நாடு செல்கின்றனர். இவர்களில் பாதிப் பேர் வீட்டு வேலை செய்பவர்கள். இவ்வாண்டில் 348 பேர் வெளிநாடுகளில் இறந்துள்ளனர்.

மேலும் பெண் குடியேற்றதாரத் தொழிலாளர்களில் சுமார் பத்து விழுக்காட்டினர் தங்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர் என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.