2010-12-21 15:36:50

கர்நாடகாவில் கிறிஸ்தவ இளைஞர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெற ஆயர் வேண்டுகோள்.


டிச 21, 2010. கர்நாடகாவில் 2008ம் ஆண்டு இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாகக் கிறிஸ்தவ இளைஞர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை அரசு திரும்பப் பெறவேண்டும் என அரசியல் தலைவர்களைச் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் மங்களூர் ஆயர் அலோசியஸ் டி சூஸா.

2008ம் ஆண்டு செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் கிறிஸ்தவக் கோவில்களும் வழிபாட்டுத்தலங்களும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த மோதல்கள் தொடர்பாக கிறிஸ்தவ இளைஞர்கள் மீது போடப்பட்ட எறத்தாழ 200 வழக்குகள் திரும்பப் பெறவேண்டும் என பிஜேபி கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோரை சந்தித்து விண்ணப்பத்தை முன்வைத்தார் ஆயர்.

பொதுவாகவே சட்டத்தை மதித்து அமைதியில் வாழவிரும்பும் கிறிஸ்தவ சமூகம் 2008ல் காட்டியது, திட்டமிட்ட தாக்குதலுக்கு எதிரான இயல்பான கோபமே என்றுரைத்த ஆயர் அலோசியஸ் டி சூஸா, கிறிஸ்தவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதையும் பொய்வழக்குகள் போட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். ஆயரின் விண்ணப்பத்திற்கு பிஜேபி கட்சித் தலைவரும் கர்நாடக முதல்வரும் நம்பிக்கைத்தரும் பதிலைத் தந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.