2010-12-20 15:15:36

“தனிமனித நேயம் தரணியெங்கும் விதைக்கப்பட!”


டிச.20,2010. “எனது செல்லமே.. நீ இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரையறைக்குள் உன்னைத் தள்ள எனக்குத் துளிகூட விருப்பம் இல்லை. ஆனாலும் ஒரு தாயாக நின்று உன்னைக் கடைசி வரை மனிதாபிமானமுள்ள ஒரு "மனிதமாகவே" பார்க்க ஆசைப்படுகிறேன்”. இது ஒரு தாய் தான் பெற்ற குழந்தையைப் பார்த்துச் சொன்னது. ஒவ்வொரு தாயும் தனது குழந்தையைப் பார்த்துத் தனது கனவுகளைச் செய்கையாலும் சொல்லாலும் சொல்லி வருகிறார். வானொலி நேயர்களே, நம் ஒவ்வொருவரது தாயும் நமக்கும் சில செய்திகளைக், குறிப்பிட்ட ஒரு செய்தியை குழந்தைப் பருவம் முதலே நம்மில் ஆழமாகப் பதித்திருக்கின்றனர். கிறிஸ்மஸ் பெருவிழா நெருங்கி வர வர நமக்கும் நமது பிறப்புப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக வருகின்றன.

உலகில் வினாடிக்கு 4.17 என்ற விகிதத்தில் பிறப்புகள் இடம் பெறுகின்றன என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வரலாற்றில் தடம் பதிப்பதில்லை. பிறப்பைப் பற்றி ஒருவர் எழுதுகிறார் – “அகிம்சை எனும் அன்பு வழியில் ஒரு மனிதன் மகாத்மாவாகப் பிறந்தான். எழுத்து எனும் வேள்வித் தீயில் இன்னொரு மனிதன் மகா கவியாகப் பிறந்தான். இப்படியாக எத்தனையோ பேர் மனிதர்களாகத் தோன்றி அறிஞர்களாக... ஞானிகளாகப் பிறந்தார்கள்..! ஆனால் ஏன் பிறந்தோம் என்றே தெரியாமல்... தான்தோன்றிகளாகத் திரியும் எத்தனையோ...சொல்லிக் கொள்கிறது தானும் மனிதன்” என்று. உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் மனிதம் கொண்ட மனிதனாக, மகானாக, மகாகவியாக.... சிறக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்து 150 ஆண்டுகள் பிறக்கவிருக்கும் 2011ம் ஆண்டு மே ஏழாம் தேதி நிறைவடைகின்றன. இந்தப் பிறந்த நாளை இந்தியாவும், பங்களாதேஷிம் இணைந்து கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்த கடந்த வார இறுதியில் இந்திய அரசின் குழு ஒன்று டாக்கா சென்றது. இரவீந்திரநாத் தாகூர் பெற்றவரும் மற்றவரும் எதிர்பார்க்கும் மகானாக வாழ்ந்தவர். 1861ம் ஆண்டு மே 7ம் தேதி கல்கத்தாவில் செல்வக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது கீதாஞ்சலிக்காக, 1913ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நொபெல் விருது பெற்றவர். இந்த விருதை ஐரோப்பியர் அல்லாத ஒருவர் முதன்முதலில் பெற்றார் என்ற பாராட்டையும் அப்போது அவர் பெற்றவர். இந்த மகானின் 150வது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்கள் 2011ம் ஆண்டு மே 7ம் தேதி இந்தியாவிலும், 8ம் தேதி பங்களாதேஷிலும் துவங்கவுள்ளன. இவ்விழா 2012ம் ஆண்டு வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரத்தில் கடலூரில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. இவர் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர்.

முட்டையிலிருந்து பிறக்கும் குஞ்சு, மொட்டு விரியும் மலர், வெட்டி அடித்த நெல்மணி, குத்தி உமி நீங்கிய அரிசி. இவையெல்லாமே அழகானப் பிறப்புக்கள்தான். ஆயினும், மானிடப் பிறப்பு இவற்றிலெல்லாம் சிறப்பானது. இந்தப் பிறப்பு மனிதநேயத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அது சிறப்புப் பெற்றதாய் இருக்கும். இந்த மானிட உயிர் ஒன்று உலகில் பிறக்கும் நொடியில், அதன் மரண கடிகாரம் துடிக்கத் தொடங்குகிறது. ஒரு புதுக்கவிஞன் எழுதுகிறான் - பிறப்பு என்ற சொல்லுக்குள்ளேயே இறப்பும் இருக்கிறது. பிறப்பில் அழுது பின்னர் சிரிக்கும் பிள்ளைக்குத் தெரிவதில்லை பருவத்தில் அது பிறருக்குக் கொடுக்கப்போவது சிரிப்பா அழுகையா என்பது...! என்று. ஆம். பிறக்கும் ஒவ்வொருவரும் பிறருக்குக் கொடுக்கப் போவது சிரிப்பாகவே இருக்க வேண்டும்.

கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் அருகே தனது மகள் இறந்ததுகூடத் தெரியாமல், பட்டினியால் மயக்கமடைந்த முதியவரை இளைஞர்கள் சிலர் காப்பாற்றியுள்ளனர். அண்மையில், காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அகலப்படுத்தப்பட்ட போது, அந்தப் பணியை மேற்கொண்டவர்கள், அப்பகுதியில் உள்ள கந்தன் பார்க்கில் குடிசை போட்டுத் தங்கியிருந்தனர். அவர்களது பணி முடிந்தபின், அந்தக் குடிசைகளை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற குடிசையில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் குடிசைக்குள் நுழைந்து பார்க்க, அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல்... அதன் அருகே, நினைவுகளைத் தொலைத்த முதியவர் ஒருவர். அந்த முதியவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளிவித்து, தேனீரும் பிஸ்கெட்டும் வாங்கிக் கொடுத்து முதலில் கருணை காட்டியது காவல்துறை. அதன்பின் விசாரணையைத் துவக்கியது. 90 வயதில் கண்கள் வெளிறிப்போய், திக்கித் திக்கி பேசத் துவங்கியிருக்கிறார் அந்த முதியவர்.

அழக்கூட முடியாமல், "ஹீனமான' குரலில் பேசி முடித்த அந்த முதியவரை மருத்துவமனை ஒன்று ஏற்காததால், அங்கிருந்த இளைஞர்கள் சிலர், தமிழக அரசின் “உயிர்காக்கும் 108” என்ற மருத்துவ துரித வாகனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மறுப்புகள் தொடரவே, காஞ்சிபுரம் தாசில்தார் முயற்சியால் அந்த முதியவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அந்த முதியவருக்கு நல்ல மரணத்தைக் கொடுத்த அந்த உள்ளங்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவை.

செல்வந்தர் ஒருவர், தன்னைத் தேடி வருவோருக்கு இல்லையென்று சொல்லாமல் பண உதவி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவருடைய நண்பர் அவரிடம், ''இப்படிக் கேட்டவுடன் நீ பணம் கொடுக்கிறாயே... அவர்கள், நீ கொடுக்கும் பணத்தைச் சரியான முறையில்தான் பயன்படுத்துகிறார்கள் என்று உனக்கு நிச்சயமாகத் தெரியுமா? படிப்புக்காக என்று சொல்லி உன்னிடம் பணம் கேட்பவர்கள், உண்மையில் படிப்புக்காகத்தான் அந்தப் பணத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?'' என்று கேட்டார். இந்தக் கேள்வி, செல்வந்தரின் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் பிறகு, உதவி கேட்டு யார் வந்தாலும், அவரைத் துருவித் துருவி விசாரித்தார். அவர்களின் பதில் முரண்பாடாக இருந்தால், பணம் தராமல் நிராகரித்தார். இதனால், அவர் செய்யும் உதவிகள் குறையத் துவங்கின. அதே நேரம், அவருக்கு வந்த வர்த்தக ஒப்பந்தங்களும் கரையத் தொடங்கின! இந்த நிலையில் அவர் சிந்தித்தார். என்னிலிருந்த இறைமைப் பண்பு, 'துருவித் துருவி ஆராயாமல், வாரி வழங்க வைத்தது. ஆனால் என்னிடம் வந்தவர்களை விசாரிக்கத் துவங்கியதும், அந்த இறைமை எனது மெய்த்தன்மையைப் பரிசீலிக்கத் துவங்கி விட்டது. எனவே இனி, பழையபடி வழங்குவது’ என முடிவு செய்தார். அதன்படியே அவர் செயல்பட, அவரின் வர்த்தகமும் செழிக்கத் துவங்கியது.

ஆம். உயர்ந்த எண்ணங்களும், அடுத்தவரைப் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனைகளுமே ஒருவரை உயர்த்தும், மனிதாபிமானமிக்க மகான்களை உருவாக்கும். இந்தச் சிந்தனைகளைக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆனால் எதிர்மறையான சிந்தனை ஏற்படும்போது, நம்மையும் அறியாமல் துயரம் நம் தோளில் அமர்ந்துகொள்ளும். நல்லவற்றைப் புறந்தள்ளி, அல்லவற்றை உயர்த்திப் பிடிக்கும். இத்தகைய மனிதர்களைச் சமூகம் என்றுமே நேசித்ததில்லை. எப்போதும் எதிர்மறையாகச் சிந்திப்பதும் பேசுவதும் ஒருவரது மகிழ்ச்சியை மறியல் செய்து, அது வெளியே வராமல் தடுத்துவிடுகிறது. தமிழகத்தில் ஓர் ஊரில் இளைஞர்கள் சிலர், தன்னார்வத்துடன் சாலைகள் சிலவற்றைச் சீரமைக்கச் சென்றனராம். ஆனால் அன்று மாலையே சோர்வுடன் திரும்பினார்களாம். காரணம், அவர்கள் சாலையைச் செப்பனிடும்போது, 'தேர்தல் நேரம்... அதனால்தான்’ என்று சம்பந்தமின்றி கமென்ட் அடித்து, அவர்களைச் சிலர் புண்படுத்தியதாகச் செய்தியில் வாசித்தோம். நல்லனவற்றையும் கண்டனக் கண்கொண்டு பார்க்கும் போது நல்ல உள்ளங்களும் சோர்ந்து போகின்றன.

தானும் நல்ல எண்ணங்களுடன் வாழாமல், பிறரையும் உயரிய எண்ணங்களுடன் வாழ விடாமல் தடுப்பவர்கள் வாழும் போதே இறந்து வாழ்கிறார்கள் என்று சொல்லலாமா? “அவன் செத்துப்போனான் சரி, ஆனால் அவன் எப்போது வாழ்ந்தான்?” என்று இவர்களைப் பார்த்துக் கேட்கலாம் தானே! வாழும்போது வாழாதவன், செத்தபோது மட்டுமா செத்தான்? என்பது நியாயமான கேள்விதானே!

அன்பர்களே, எவருக்கும் உதவ முற்படுதல், எதையும் காக்க முன்வருதல், எவரும் எதுவும் வீணாகாது செயல்படல் உலக ஞானம் என்கிறது சீன ஞானம். சிறந்த பூட்டுக்கு உறுதுணையோ, நல்ல முடிச்சுக்குத் துணைக்கயிறோ மறந்தும் தேவைப்படுவதில்லை. வாழ்க்கையில் நம்பிக்கையை நெஞ்சில் கொண்டால் ஆழ்கடலையும் தாண்டலாம். கணுவெல்லாம் இனித்திருக்கும் கரும்பையும் சுவைக்கலாம்.

நம் வாழ்வில் முக்கியமானது எது? பெயரா? புகழா? மனநிறைவா? எப்பொழுதும் நிலைப்பது எது? எளிமையும் மனிதமும் நிறைந்த வாழ்வு அல்லவா?. மனிதத்தை வாழ வைக்க மனிதஉரு எடுத்த இயேசுவின் பிறப்புப் பெருவிழாக் காலம் நம்மில் மனிதத்தை, மனிதாபிமானத்தை வளர்க்கட்டும். இந்த இயேசு, அமைதியின்றி அவதிப்படும் நம் உடன்வாழ் சகோதரரின் துயர் துடைக்க நமக்கு மனத் துணிவைத் தருவாராக! கலவரங்கள் பெருகியுள்ள இந்த மண்ணிலே துன்பநிலை மாற்றி அன்புப் பூப் பூக்க வைக்க நம்மைத் தூண்டுவாராக! மனிதத்தைத் தொலைத்து விட்ட மகத்தான மண்ணில் தனிமனித நேயத்தைத் தரணியெங்கும் நாம் விதைக்க நம்மில் நல்லுணர்வை ஊட்டுவாராக!








All the contents on this site are copyrighted ©.