2010-12-20 14:56:18

வத்திக்கான் மற்றும் உரோம் நகர் திருச்சபை உயர் அதிகாரிகளுடன் திருத்தந்தையின் சந்திப்பு


டிச.20, 2010. மிகுந்த மகிழ்ச்சியுடன் துவக்கப்பட்ட குருக்கள் ஆண்டின்போது, குருக்களின் தவறான பாலின நடவடிக்கைகள் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள், மத்தியகிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் மாநாடு மற்றும் இவ்வாண்டில், தான் மேற்கொண்ட திருப்பயணங்கள் ஆகியவை குறித்து, வத்திக்கான் மற்றும் உரோம் நகர் திருச்சபை உயர் அதிகாரிகளுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இத்திங்களன்று திருச்சபை அதிகாரிகளுக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்களை வழங்கிய இச்சந்திப்பின்போது, குருத்துவத்தின் மேன்மை குறித்தும் தேவ அழைத்தல்களின் முக்கியத்துவம் குறித்தும் தன் உரையின் துவக்கத்தில் எடுத்துரைத்த திருத்தந்தை, சிறார்களை தவறான பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்திய சில குருக்களின் செயல்பாடுகள் குறித்த ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.

திருச்சபைக்கு இக்குருக்களால் ஏற்பட்டுள்ள களங்கத்தைக் குறித்து விவரிக்க, புனித Hildegard கண்ட ஒரு காட்சியைக் குறித்தும் எடுத்துரைத்து விளக்கினார் பாப்பிறை.

குருக்களின் இத்தவறான நடவடிக்கைகள் குறித்தும், அது தொடர்பான பொறுப்புணர்வுகள் குறித்தும் திருச்சபை உணர்ந்துள்ள அதே வேளை, இன்றைய உலகில் பாலர் குறித்த இழிவு இலக்கியங்கள் கண்டனத்துக்குரியதாக நோக்கப்படாமல், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருப்பது குறித்தும் திருச்சபை கவலை கொண்டுள்ளது என்றார் திருத்தந்தை.

பாலியல் நடவடிக்கைத் தொடர்புடைய சுற்றுலாப்பயணங்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவை குறித்த கவலையும் திருத்தந்தையால் வெளியிடப்பட்டது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் பேரவை, மற்றும் மால்ட்டா, போர்த்துக்கல், இஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான தன் திருப்பயணம் குறித்தும் திருச்சபை அதிகாரிகளுடன் ஆன சந்திப்பின்போது தன் சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.